Doctor Vikatan: அன்றாட மறதி, பிற்காலத்தில் ஏற்படப்போகும் நினைவிழப்பின் அறிகுறியா?

அன்றாடம் பார்க்கும் நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், சில எண்கள் போன்றவை திடீரென மறந்துவிடுவது ஏன்? சில நிமிடங்களுக்குப் பிறகு அவை மீண்டும் நினைவுக்கு வருகின்றன. தற்காலிக மறதிக்கு என்ன காரணம்? இது பின்னாளில் வரப்போகிற நிரந்தர மறதி பிரச்னையின் அறிகுறியா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்

நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்

மனிதனுடைய நினைவு என்பது பல பகுதிகளைக் கொண்டது. நாம் பார்க்கிற, கேள்விப்படுகிற விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என நினைப்போம். அதாவது முதலில் அந்த விஷயங்கள் நமது நினைவில் முறையாகப் பதியவேண்டும். பிறகு நினைவில் நிறுத்துவது… அடுத்து தேவைப்படும்போது அவற்றை நினைவுபடுத்துவது. இதைத்தான் ரெஜிஸ்ட்ரேஷன் (Registration), ரிட்டென்ஷன் (Retention) மற்றும் ரீகால் (Recall) என்கிறோம். இந்த மூன்றும் அடங்கியதுதான் நினைவாற்றல்.

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் தொலைபேசி எண்கள், சிலரின் பெயர்கள், எந்தப் பொருளை எந்த இடத்தில் வைத்தோம் என்பது உள்பட பல விஷயங்கள் மறந்து போகலாம். இதற்கு மேற்குறிப்பிட்ட நினைவாற்றலின் மூன்று நிலைகளில் எதில் வேண்டுமானாலும் பிரச்னை இருக்கக்கூடும்.

முதல் விஷயமாக, கவனக்குறைவின் காரணமாகவும் இப்படி மறந்து போகலாம். அதாவது பதற்றத்தின் காரணமாக ஒரு விஷயத்தைச் சரியாக கவனிக்க முடியாத நிலையில் அது நம் நினைவில் தங்காமல் போகலாம். இந்நிலையில் முதலில் குறிப்பிட்ட ரெஜிஸ்ட்ரேஷன், அதாவது நினைவுப் பதிவு என்பது நடக்காது. ஒரு விஷயம் நினைவில் பதிவாக நிலையில் அதை நினைவுபடுத்துவது என்பது இயலாமல் போகும்.

Memory loss

இதைத் தவிர மறதிக்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். அதாவது சிலருக்கு மறதி பாதிப்பு இருக்கலாம். ஆனால் அந்த மறதி அவர்களது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

அப்படி அன்றாட வாழ்க்கையை பாதிக்காதவரை அதில் பிரச்சனை இல்லை. அந்த நிலை ‘மைல்டு காக்னிட்டிவ் இம்பேர்மென்ட்’ Mild cognitive impairment (MCI) எனப்படும்.

அதுவே ஒருவரது மறதி அவரது அன்றாட வேலைகளை பாதித்தாலோ, அந்த நபருக்கு மற்றவர்களுடனான உறவை, நட்பை பாதித்தாலோ அது சற்று தீவிரமானது. அந்த நிலையை டிமென்ஷியா (Dementia) என்கிறோம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல உங்களுக்கு இருக்கும் இந்த மறதி பாதிப்பானது பிற்காலத்தில் வரப்போகிற பிரச்னையின் அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அப்படி இருக்கவும் வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

எனவே உங்களுக்கு மறதி பாதிப்பு இருப்பதை உணர்ந்தவுடன் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி அதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் குறிப்பிட்ட சில வைட்டமின் குறைபாடுகளின் காரணமாகவோ அல்லது தைராய்டு பாதிப்பின் காரணமாகவோகூட இப்படி மறதி பாதிப்பு வரலாம்.

Brain – Representational Image

முதல் கட்டமாக இந்த விஷயங்களை கவனித்துவிட்டு அதன் பிறகும் மறதி தொடரும் பட்சத்தில், நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். அவர் உங்களுடைய பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.