பெங்களூரு: 2022ம் ஆண்டுக்கான சைமா திரைப்பட விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது.
10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
மலையாளத்தில் மின்னல் முரளி, களா ஆகிய படங்களில் நடித்த டோவினோ தாமஸ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
சைமா விருதுகள் 2022
கடந்தாண்டு சைமா திரைப்பட விருதுகள் விழா ஐதாராபாத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10வது ஆண்டு சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. 10, 11 என இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த விழாவில், முதல் நாளில் தெலுங்கு, கன்னட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற விழாவில், தமிழ், மலையாளம் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
கலக்கிய டோவினோ தாமஸ்
மலையாளாத்தில் சிறந்த திரைப்படமாக ‘மின்னல் முரளி’ தேர்வானது. பாசில் ஜோசப் இயக்கியிருந்த இந்தப் படம் சூப்பர் மேனை பின்னணியாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இந்தப் படத்திற்கு நல்லவ் விமர்சனங்கள் கிடைத்தன. இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த டோவினோ தாமஸ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். ‘களா’ படத்தில் நடித்ததற்கும் சேர்த்து இந்த விருது வழங்கப்பட்டது. அதேபோல், மின்னல் முரளி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த குரு சோமசுந்தரம், சிறந்த வில்லன் விருதை வென்றார்.
மகேஷ் நாராயணன் சிறந்த இயக்குநர்
மலையாளத்தில் சிறந்த திரைப்படமாக மின்னல் முரளி தேர்வான நிலையில், சிறந்த இயக்குநர் விருதை மகேஷ் நாராயணன் தட்டிச் சென்றார். ஃபஹத் பாசில் நடிப்பில் மகேஷ் நாராயணன் இயக்கியிருந்த ‘மாலிக்’ செம்மையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து இந்தப் படத்திற்காக மகேஷ் நாராயணன் சிறந்த இயக்குநர் விருதை பெற்றார். இந்தியன் 2-க்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகை உட்பட மற்ற விருதுகள்
முதன்மை பாத்திரத்தில் நடித்த சிறந்த நடிகைக்கான விருதை நிமிஷா சஜயன் வென்றார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் நடித்ததாற்காக இந்த விருது வழங்கப்பட்டது. மேலும், ‘காணேக்கானே’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் இதே விருதை வென்றார். அதேபோல், இதேபிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை ‘ஆர்க்காரியம்’ படத்தில் நடித்த பிஜூ மேனன் வென்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை, ‘ஹோம்’ படத்திற்காக மிர்ச்சி சிவா பெற்றார்.
சிறந்த இசையமைப்பாளர், துணை நடிகர்
சிறந்த துணை நடிகருக்கான விருது ஜோஜி படத்தில் நடித்த பாபுராஜுக்கும், அதே படத்தில் நடித்த உன்னிமாயா பிரசாத் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றனர். சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது ‘வாங்கு’ படத்திற்காக காவ்யா பிரகாஷ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘வெள்ளம்’ படத்திற்காக பிஜி பாலுக்கு வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை சுஜாதா வென்றார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது ‘குரூப்’ படத்திற்காக நிமிஷ் ரவிக்கு வழங்கப்பட்டது.