லக்னோ: கியான்வாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாரணாசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. அந்தப் பகுதியில் இருந்த கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர்கள் மசூதி கட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மசூதியின் வளாகச் சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று ஐந்து இந்துப் பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று (திங்கள் கிழமை) முக்கிய தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியான்வாபி மசூதிவளாகத்தில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டுதோறும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மசூதியினுள் கள ஆய்வு நடத்த வேண்டும் என்று வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மசூதியில் நடத்தப்பட்ட களஆய்வில், அங்குள்ள ஒசுகானவின் நடுவே சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் மத்திய வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-ன்படி மசூதிக்குள் கள ஆய்வு நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று கியான்வாபி மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் சிக்கல் தன்மை, முக்கியத்துவம் கருதி வழக்கை வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் மூத்த நீதிபதி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்தநிலையில், கியான்வாபி வழக்கின் விசாரணையை முடித்த வழக்கில் நீதிபதி ஏ.கே. விஷ்வேஷா தீர்ப்பை செப். 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.
பலத்த பாதுகாப்பு:
இன்று தீர்ப்பு வெளியாவதைத் தொடர்ந்து வாரணாசியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சதீஷ் கணேஷ், “இரண்டு பிரிவு மக்கள் வாழும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. நகரின் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்துவதற்கு மதத்தலைவர்களுடன் தொடர்பு கொள்ள போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பும், பேரணியும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைப்பகுதிகள், விடுதிகள் விருந்தினர் மாளிகைகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.