சென்னை: விசாரணை மற்றும் பிற பணிகளை விரைந்து மேற்கொள்ள வசதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கணினி முழுமையாக பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், ஐபிஎஸ் அல்லாத போலீஸாரின் ஆண்டு செயல்திறன் அறிக்கையை பதிவு செய்வதற்காக மென் பொருள் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முன்னெச்சரிகை நடவடிக்கை மேற்கொள்ளுதல், குற்ற செயல்களை தடுத்தல், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்தல், பொது மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளை போலீஸார் மேற்கொள்கின்றனர்.
காவல் துறையில் சட்டம் ஒழுங்கு மட்டும் அல்லாமல் நுண்ணறிவு, குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, இணைய குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, அமலாக்கப் பிரிவு, சிறப்பு இலகுப்படை, தொழில் நுட்ப சேவைகள் பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, காவல் பயிற்சி பள்ளி, ரயில்வே, ஆயுதப்படை, கடலோர பாதுகாப்பு குழுமம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, மாநில குற்ற ஆவண காப்பகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.
மொத்தத்தில் தமிழகத்தில் 1,305 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து மற்றும் புலனாய்வு காவல் நிலையங்கள் மற்றும் 27 காவல்துறை புறக்காவல் நிலையங்கள் உள்ளன.
பெரும்பாலான காவல் நிலையங்களில் கணினி பயன்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து எழுத்து மற்றும் ஆவணங்களை சேமித்து வைக்கும் பணிகள் முழுமையாக கணினி மயமாக்கப்பட உள்ளன.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “காவல் நிலையங்களில் கணினி பயன்படுத்துவதால் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் வழக்கு, குற்றவாளி, குற்றத்தின் தன்மை, குற்றம் செய்யப்பட்ட முறைகள், குற்றவாளிகளின் கைரேகை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கணினியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய முடியும்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பிற மாவட்டங்களிலோ, பிற காவல் நிலைய எல்லைகளிலோ குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும்போது விரைவில் விசாரணை செய்து முடிக்க இது உதவியாக இருக்கும்” என்றனர்.
குற்றப் பத்திரிகை, சாட்சிகள் வாக்குமூலம், சாட்சிப் பட்டியல், இறுதி அறிக்கை உள்ளிட்டவற்றையும் உடனுக்குடன் தயார் செய்து அதை கணினியில் பாதுகாப்பாக வைக்க முடியும். இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கணினிகள் மற்றும் துணைக் கருவிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “காவல் நிலையத்தில் விசாரணை மற்றும் பிற பணிகளை மேற்கொள்ள கணினிகள், அச்சுப் பொறிகள் போன்றவை, மாநிலத்தில் உள்ள 1,507 காவல் நிலையங்களுக்கும் ரூ.23 கோடி செலவில் வழங்கப்பட உள்ளன. மேலும், ஐபிஎஸ் அல்லாத போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் ஆண்டு செயல்திறன் அறிக்கையை பதிவு செய்வதற்காக ரூ.2.45 கோடியில் மென்பொருள் (SPARROW) செயலி தயாராகி வருகிறது” என்றனர்.