புதுடெல்லி: சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காரில் ஏர் பேக்-ன் அவசியத்தையும், ஆறு ஏர்பேக்களை ஊக்குவிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்த சாலை பாதுகாப்பு விளம்பரம் ஒன்றினை வெள்ளிக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த விளம்பரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அமைச்சர் பகிர்ந்துள்ள விளம்பத்தில், திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு காரில் செல்லும் மணமகளைப் பார்த்து, பெண்ணின் தந்தை அழுது கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் போலீஸ் அதிகாரி (அக்ஷய் குமார்), 6 ஏர் பேக்குகள் உள்ள காரில் மணப்பெண்ணை அனுப்புவதற்கு பதிலாக இரண்டு ஏர் பேக்குகள் மட்டுமே உள்ள காரில் அனுப்புவதற்காக அந்தத் தந்தையை கேலி செய்கிறார். இந்த விளம்பரத்தை பகிர்ந்துள்ள நிதின் கட்கரி, 6 ஏர்பேக்குள் கொண்ட காரில் பயணம் பண்ணுங்கள் வாழ்க்கையை பாதுகாப்பானதாக்குங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விளம்பரம் அரசாங்க பணத்தில், தண்டனைக்குரிய குற்றமான வரதட்சணை கலாச்சாரத்தை ஊக்கப்படுத்துவதாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த விளம்பரம், வரதட்சணை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக சிவசேனா கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. பிரியங்கா சதுவேதி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஒரு பிரச்சினைக்குரிய விளம்பரம். யார் இந்த மாதிரியான விளம்பரங்களை எடுக்கிறார்கள். அரசாங்கம் தனது பணத்தினை காரின் பாதுகாப்பு அம்சம் குறித்து விளக்க செலவளித்துள்ளதா அல்லது தண்டனைக்குரிய குற்றமான வரதட்சணை வழங்குவதை ஊக்குவித்துள்ளதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, இந்திய அரசு வரதட்சணையை அதிகாரபூர்வமாக ஊக்குவிப்பது மிகவும் அருவருப்பானது என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், இந்த விளம்பரம் தான் சொல்ல வந்த கருத்துக்கு எதிராக உள்ளது. இது திருமணத்தைத் பற்றியதா அல்லது வரதட்சணையாக 6 ஏர் பேக்குகள் உள்ள காரை வழங்கவேண்டும் என்பதை பற்றியதா எதைப்பற்றி விளம்பரம் தெரிவிக்கிறது. இந்த அரசு விளம்பரம் முற்றிலும் குழந்தைத் தனமானது. வேறு வழியில் இவர்களால் சாலைபாதுகாப்பு பற்றி பேச முடியாதா என்று தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு பயனர், “அராசங்கம் தண்டணைக்குரிய குற்றமான வரதட்சணை ஊக்குவிப்பதற்காக மக்களின் வரிப்பணத்தை செலவளிப்பது இந்திாயவில் மட்டும் தான் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று தேசிய அளவில் சாலை பாதுகாப்பு குறித்த பிரச்சாரத்திற்கு அக்ஷய் குமார் அளித்துள்ள ஆதரவிற்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் கட்கரி, சாலை பாதுகாப்பு குறித்த பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அக்ஷய் குமாரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று தெரிவித்திருந்தார்.
6 एयरबैग वाले गाड़ी से सफर कर जिंदगी को सुरक्षित बनाएं।#राष्ट्रीय_सड़क_सुरक्षा_2022#National_Road_Safety_2022 @akshaykumar pic.twitter.com/5DAuahVIxE
— Nitin Gadkari (@nitin_gadkari) September 9, 2022