விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய ‘ஆடுகளம்’ தகவல் தொடர்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் உதவி மையத்தை தொடர்பு கொண்டு விளையாட்டு வீரர்கள் கேட்டுக் கொள்ளலாம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதளப் பதிவையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1,130 வீரர்கள், வீராங்கனைகளுக்கு காசோலைகள், விருதுகளை வழங்கினார். 2018 – 19-20ம் ஆண்டுக்கான விளையாட்டு விருத்தாளர்களுக்கு பரிசுத் தொகையையும் வழங்கினார். பின்னர், விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், தமிழக விளையாட்டுத்துறை சுறுசுறுப்பாக இயங்குகிறது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட்டை அமைச்சர் மெய்யநாதன் நடத்தி காட்டினார். அமைச்சர் மெய்யநாதன் ஸ்போர்ட்ஸ் நாயகனாகவே மாறிவிட்டார். தனது துறையை என்றும் எப்போதும் துடிப்பாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும். பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு வீரர்கள் பெருமை சேர்க்க வேண்டும். செஸ் ஒலிம்பியாட் போட்டி நகரம் முதல் கிராமம் வரை மாணவர்கள், இளைஞர்கள் மீது விளையாட்டு மீதான ஆர்வத்தை தூண்டியது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்கள், கிராண்ட் மாஸ்டர்கள் மூலம் இலவசமாக ஆன்லைனில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கபடி, சிலம்பாட்டத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உலகளவில் விளையாட்டில் தமிழக வீரர்கள் பங்கேற்று சாதனை புரிய வேண்டும் என்பதால் இதுபோன்ற விழா நடக்கிறது.தமிழ்நாட்டில் செப்டம்பர் முதல் 6 மாதங்களுக்கு பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
அக்டோபரில் மாவட்ட அளவிலும், ஜனவரியில் மாநில அளவிலும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும். ஊக்கத்தொகை வழங்கப்படாமல் இருந்த சாதனையாளர்கள் கண்டறியப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பை உருவாக்குகிறோம். தமிழ்நாடு அரசு வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறது. சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் இன்று தொடங்க உள்ளது. தமிழக விளையாட்டுத்துறையில் புது மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது” எனவும் கூறினார்.