சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ’புதுமைப் பெண்’ திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கிவைத்துள்ளார்.
’ ’புதுமைப் பெண்’ திட்டத்தில் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலமாக அவர்களுக்கு உயர் கல்வி உறுதி செய்யப்படுகிறது. குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும். பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைக்க வேண்டும். பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பு தொடர வேண்டும். அத்துடன் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல் ஆகிய நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படுகிறது’ என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் யார் பயனடையலாம்?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும். மாணவிகள் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
எந்தெந்த படிப்புகளுக்கு உதவித்தொகை கிடைக்கும்?
புதுமைப் பெண் திட்டத்தில், சான்றிதழ் படிப்பு (Certificate Course), பட்டயப் படிப்பு (Diploma/ITI.,/D.TEd., Courses), இளங்கலைப் பட்டம் (Bachelor Degree – B.A., B.Sc., B.Com., B.B.A, B.C.A., and all Arts & Science, Fine Arts Courses), தொழில் சார்ந்த படிப்பு (B.E., B.Tech., M.B.B.S., B.D.S. B.Sc., (Agri.), B.V.Sc., B.Fsc., B.L., etc.,) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc.,) போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகையானது, மாதந்தோறும் உயர்கல்வியை நிறைவு செய்யும் ஆண்டு வரை வழங்கப்படும்.
இந்த ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகை கிடைக்குமா ?
கிடைக்கும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதால்.. இந்த ஆண்டு முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களுக்கும் கிடைக்கும். அதே போல தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில், மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில், நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர். அதாவது இந்த ஆண்டு படித்துக் கொண்டிருந்தாலும், இறுதி ஆண்டு சென்றாலும் இத்திட்டத்தில் பயன் பெறலாம் என்று கூறுகின்றனர்.
மொத்தத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு படித்து முடிக்கும் வரை அனைத்து ஆண்டுகளுக்கும் மாதந்தோறும் இந்த உதவித்தொகை கிடைக்கும்.
உயர்கல்விக்கு உதவித் தொகை வழங்கும் தமிழக அரசின் ’புதுமைப் பெண்’ திட்டத்தின் ப்ளஸ், மைனஸ்களை அறிய, கல்வியாளர்களிடம் பேசினோம்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள அரசு உதவிபெறும் பழமையான பள்ளியான பரமானந்தா நடுநிலைப்பள்ளியின் செயலாளர் ஞானபிரகாசம் கூறியதாவது:
’’அரசு உதவி பெறும் பள்ளிகள் என்பது தனியார் பள்ளிகளைப் போல பீஸ் வாங்கி நடத்தும் பள்ளிக்கூடம் இல்லை. அரசுப்பள்ளிகள் ஆரம்பிக்காத காலத்திலே எங்களைப்போல பள்ளிகள்தான் கிராமங்கள் வரை கல்விப்பணியை செய்தன.
இன்னும் சொல்லப்போனால் அரசுப்பள்ளிகள் இல்லாத பல கிராமங்கள் உண்டு, அங்கு இன்று வரை எங்களைப்போல அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டும்தான் செயல்படுகின்றன. இதில் கஷ்டப்பட்ட குடுப்பதில் உள்ள மாணவ மாணவிகள் அதிகம் படித்து வருகின்றனர்.
50 ஆண்டுகள், 100 ஆண்டுகளைத் தாண்டிய அரசு உதவிபெறும் பள்ளிகள் நிறைய உள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ’புதுமைப் பெண்’ திட்டத்தில் உதவித்தொகை கிடையாது என்பதை இந்தப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கு பாதிப்பாகத்தான் நினைப்பார்கள். இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிக்கு சென்று சேருவார்கள்.
சில பெற்றோர்கள், ’இந்த ஸ்கூல் வேண்டாம், கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சாதான் உதவித் தொகை கிடைக்கும்’ என்று பக்கத்துக்கு ஊர் பள்ளிக்கூடத்துக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைப்பார்கள். மாணவிகள் படிக்க பக்கத்துக்கு ஊருக்கு பஸ் ஏறி போகும்போது பல பிரச்னைகள், சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
காலங்காலமாக அரசுப்பளிகள் இல்லாத நிறைய கிராமங்களிலும் நாங்கள் தான் கல்விப் பணி செய்து வருகிறோம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் இருந்து படிக்கும் மாணவ, மாணவிகள் அதிகம் பயனடைகின்றனர்.
புளியங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளியான எங்கள் பரமானந்தா நடுநிலைப்பள்ளி ஆரம்பித்து 104 ஆண்டுகள் ஆகின்றன. சத்துணவில் இருந்து மற்ற எல்லா அரசு சலுகைகளும் உண்டு, ஆனால் உயர்கல்வியில் உதவித் தொகை எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கிடையாது என்பது பாதிப்பாகத் தானே இருக்கும்? இதனால் உள்ளூர் பள்ளிக்கூடம் பாதிக்கப்படும்தானே?
உயர்கல்வி பயில 7.5% இட ஒதுக்கீடு, உயர்கல்வி படிக்க இருக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000, மாணவ மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி, மற்றும் 4 மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் உரிமை இவையெல்லாம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு கிடையாது என்ற நிலைமாற வேண்டும்.
அரசு நிதி உதவி பெறும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளான கிறிஸ்தவ, இந்து, இஸ்லாமியப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கும் அரசின் இத்தகைய நலத்திட்டங்கள் வேண்டும்’’ என்றார்.
திருநெல்வேலியில் உள்ள அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி செயலாளர் தேசிய நல்லாசிரியர் செல்லப்பா, ’’அரசுப் பள்ளிகளில் வறுமைகோட்டுக்கு கீழே உள்ள மாணவ மாணவிகள் அதிகம் படிக்கின்றனர். பெற்றோர்கள் அக்கறை இல்லாமல் இருந்தாலும் தானாக விரும்பிப் படிக்க முன் வரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகம். அவர்களுக்கு படிக்க அரசுப் பள்ளிகள் உறுதுணையாக உள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் அறிவித்த ’புதுமைப் பெண்’ திட்டம் நிச்சயம் இவர்களை ஊக்கப்படுத்தும். மாணவிகள் தடையில்லாமல் மேற்படிப்பு படிக்க நிச்சயம் இத்திட்டம் உதவும்.
பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள நிலையில், குடும்பச்சூழல் காரணமாக பாதியில் படிப்பை நிறுத்துவதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை அதிகம். அப்படியே பள்ளிப்படிப்பை முடித்தாலும் அந்த மாணவிகள் கல்லூரி செல்வது பெரும் சவாலாகத்தான் உள்ளது. இவர்களுக்கு அரசு அறிவித்த உயர்கல்வி உதவித்தொகை நிச்சயம் அந்த மாணவிகளை படிக்க வைக்க பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் வழியில் கற்பிக்கும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவது வேதனையாக இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு இந்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விகளில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது; அதைத் தொடர்ந்து இப்போது ’புதுமைப் பெண்’ திட்டத்தையும் கொண்டுவந்துள்ளது. அரசுப் பள்ளிகளை காப்பாற்ற இத்திட்டங்கள் பெரிதும் உதவும். அத்துடன் வருங்காலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது’’ என்றார்.