கொடைக்கானல் : கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகை விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர்.கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை நாட்களில் அங்கு அரசு விடுமுறை உள்ள நிலையில் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கொடைக்கானலை முற்றுகையிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கேரள மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக வாகன ெநரிசல் ஏற்பட்டு கொடைக்கானல் – வத்தலக்குண்டு சாலை, கொடைக்கானல் – பழநி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கேரள சுற்றுலாப்பயணிகளின் திடீர் வருகையால் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. இவை மட்டுமின்றி கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கடந்த இரண்டு தினங்களாக கொடைக்கானலில் மழை இல்லாத காரணத்தினால் இதமான சூழல் நிலவி வருகிறது. இந்த இதமான சூழலை கொடைக்கானல் வந்த கேரள சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் செல்கிறார்கள்.