பாஜக மகளிரணி தேசியத் தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்திரை’ அதாவது பாரத ஒற்றுமை யாத்திரை, கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி எப்போதும், பாரதிய சிந்தனைக்கு எதிரானவர் என்பது பலமுறை நிரூபணமாகியுள்ள ஒன்று. நாடாளுமன்ற மக்களவையில், “இந்தியா என்பது நாடல்ல, மாநிலங்களின் ஒன்றியம்” என திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை முழங்கியவர். நாட்டின் எந்த பகுதிக்குச் சென்றாலும் பிரிவினைவாதம் பேசுபவர்களுடந்தான் அவர் கலந்துரையாடுவார். அவர்கள்தான் ராகுலின் நண்பர்கள், 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
நேரு குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பி.யாக இருந்த, அமேதி தொகுதியிலேயே ராகுல் தோற்றார். தோல்வி என்றதும் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். தலைவர் என்ற பொறுப்பை ஏற்காமல், கட்சிக்குள் அதிகாரத்தை செலுத்தி வருபவர் ராகுல். அதனால் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்களே காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில்தான், 60-க்கும் அதிகமான சொகுசு வசதிகள் கொண்ட கேரவன்களுடன், யாத்திரை தொடங்கியிருக்கிறார் ராகுல். இந்து மத நம்பிக்கைகள், சடங்குகள் மீது நம்பிக்கையில்லாதவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வந்த ராகுல், தேர்தலில் தொடர் தோல்வி என்றதும், இந்துவாக நடிக்கத் தொடங்கினார்.
ஆனாலும், அது மக்களிடம் எடுபடவில்லை. வட மாநிலங்களில் தன்னை இந்துவாக, பூணூல் தரித்த, கவுல் பிராமணராக காட்டிக் கொள்ளும் அவர், கோவில்கள் நிறைந்த, நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்ந்த ஆன்மிக பூமியான தமிழகத்திற்கு வந்தால் மட்டும் இந்து கோவில்களுக்கு செல்ல மாட்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் சென்றது சர்ச்சையானது. அதனால் வேறு வழியின்றி திருநெல்வேலியில் கோவிலுக்கு சென்றார். இப்போது பாத யாத்திரை என்ற பெயரில் சொகுசு கேரவன் யாத்திரை தொடங்கியுள்ள ராகுல், கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பாதிரியார்களுடன், உரையாடல் நடத்தியுள்ளார். ஆனால், யாத்திரை தொடங்கிய இடத்தில் உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குச் செல்லவில்லை. சுசீந்திரம் வந்த அவர், அருள்மிகு தாணுமாலையன் கோவில், நாகர்கோயில் அருள்மிகு நாகராஜா கோவிலுக்கும் செல்லவில்லை. இதற்கெல்லாம் நேரமில்லாத, மனமில்லாத ராகுல், இந்திய திருநாட்டையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்திய, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து பேச நேரம் இருந்திருக்கிறது.
கடந்த 2021, ஜூலை 18-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த கூட்டத்தில், மண்டைக்காடு பகவதி அம்மனை இழிவுபடுத்தி பேசியவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. நாடார் சமுதாயத்தின் பெயரைச் சொல்லி, திரு. எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அவர்களை தரக்குறைவாக பேசியவர். “பாரத மாதாவிடம் உள்ள அசிங்கம் நம்மிடம் வந்து விடக்கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு கொள்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் 62 சதவீதம் கிறிஸ்தவர்கள் இருக்கிறோம். நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம். இதனை யாராலும் தடுக்க முடியாது என்பதை இந்து சகோதரர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறோம்” என்று பேசியவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. ஜார்ஜ் பொன்னையாவின் இந்து மத வெறுப்பு பேச்சை, தேசவிரோத பேச்சை, ராகுல் காந்தி ஏற்கிறாரா என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். இப்போது ஜார்ஜ் பொன்னையாவிடம் என்ன பேசினார் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.