Apple iphone 14 features: நோக்கியாவின் 2008 மாடல் ஐடியாவை காப்பி அடித்த ஆப்பிள் ஐபோன்14?

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் அதன் தலைமையகத்திலிருந்து ஆப்பிள் 14 சீரிஸ் மொபைல்களான ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் , ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மொபைல்களையும் , ஆப்பிள் வாட்ச் SE , ஆப்பிள் வாட்ச் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ஆகியவற்றையும், அடுத்த ஜெனரேஷன் ஏர்பாட் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள ஆப்பிள் 14 சீரிஸில் இடம்பெற்றுள்ள அம்சங்களின் வரலாற்றை பார்ப்போம்.

விபத்து பாதுகாப்பு அம்சம்.

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸின் அம்சங்களில் முக்கியமானதாக குறிப்பிடப்படுவது “crash detection” என்று சொல்லக்கூடிய விபத்து பாதுகாப்பு அம்சம்தான். ஒருவர் விபத்தில் மாட்டிக்கொள்ளும்போது உடனடியாக அவசர சேவைகளுக்கு அழைப்பதுதான் இதன் பிரதான பணி.

ஆனால், இதே அம்சத்தை இதற்கு முன்பாகவே கூகுள் பிக்ஸல் அதன் பிக்ஸல் 3 மொபைலிலிருந்தே கொண்டிருக்கிறது. அதன் மொபைல்களில் safety என்று சொல்லக்கூடிய செயலிக்குள் சென்றால் அதை பார்க்க முடியும். ஆனால், பெரியளவு விளம்பரப் படுத்தப்படாததால் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. ஆனால், அதே ஆப்பிள் நிறுவனமோ இந்த அம்சத்தைதான் முக்கிய மற்றும் சிறந்த அம்சமாக விளம்பரப்படுத்தியுள்ளது.

செல்ஃபீ ஆட்டோஃபோக்கஸ்

பொதுவாக முன்பக்க கேமராவில் போட்டோ எடுக்கும்போது பல நேரங்களில் அவுட் ஆஃப் ஃபோக்கசில் போட்டோ வந்து விடும். இந்த குறையை போக்குவதற்காகவே ஆப்பிள் நிறுவனம் இந்த முறை ஆட்டோ ஃபோக்கஸ் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது. ஆனால், அது ஒன்றும் தலையில் வைத்து மெச்சுமளவிற்கான அம்சம் ஒன்றுமில்லை.

ஏனெனில், சில வருடங்களுக்கு முன்பிருந்தே முன்னணி நிறுவனங்களான சாம்சங், கூகுள் பிக்ஸல் மற்றும் ஜியோமி போன்றவை தங்களது மொபைல்களில் இந்த அம்சத்தை கொண்டு வந்துவிட்டார்கள்.குறிப்பாக சாம்சங் சமீபத்தில் வெளியிட்ட சாம்சங் கேளக்சி S22 மாடலில் கூட இந்த ஆப்ஷன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டைனமிக் ஐலேண்ட்

பொதுவாக நாட்ச் மாடல் டிஸ்பிளேயில் கேமரா இருக்கக்கூடிய இடம் டிஸ்பிளே மீதான இடத்தை அடைத்து கொள்வதால் பலரும் அதை விரும்புவதில்லை. எனவே அந்த ஏக்கத்தை போக்குவதற்காகவே ஆப்பிள் நிறுவனம் கொஞ்சம் வித்யாசமாக யோசித்து டைனமிக் ஐலேண்ட் என்ற பெயரில் டிஸ்பிளே மீதான ஒரு மினி டிஸ்பிளே வசதியை கொண்டு வந்துள்ளது.

அதன் மூலம் நாம் அந்த மினி டிஸ்பிளே வழியாக ஒரு சில செயலிகளை இயக்கி கொள்ளலாம். வெளியில் இருக்கும்போது முழு போன் டிஸ்பிளேவையும் திறந்து வேலை செய்ய வேண்டியதில்லை. அட இப்படி ஒரு அம்சத்தை ஆப்பிள் முதன் முதலாக அறிவித்துள்ளதே என்று ஆச்சரியப்பட்டு வாயை திறந்து மூடுவதற்குள்,

இல்லை இல்லை இது ஏற்கனவே LG மாடல் மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்சம் என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே LG-யின் LG V20 மாடலில் இது போன்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஆப்பிள் 14இல் இதே ஆப்ஷன் மேம்படுத்தப்பட்டு அறிமுக படுத்தப்பட்டுள்ளது.

ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே

பேட்டரியின் நீடித்த உழைப்பை உறுதிப்படுத்த மற்றும் மொபைலின் ஓய்வு நிலையிலும் பயன்பாடுகளை பெறுவதற்காக இந்த ஆப்ஷன் அறிமுக படுத்தப்பட்டுள்ளது ஆனால்,இதற்கு முன்பாகவே சாம்சங் நோக்கியா போன்ற நிறுவனங்கள் இதே வசதியை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிமுகப்படுத்தி விட்டனர்.

சாம்சங் நிறுவனம் தன்னுடைய ஆண்ட்ராய்டு மொபைலான galaxy 7இல் 2016ஆம் ஆண்டு முதன்முறையாக ஆண்ட்ராய்டு இந்த அம்சத்தை அறிமுக படுத்தியது. அதிலும் குறிப்பாக நோக்கியா நிறுவனம் 2008ஆம் ஆண்டே இந்த அம்சத்தை தனது நோக்கியே N70 மற்றும் 6303 ஆகிய மொபைல்களில் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த அம்சத்தில் ஒரு சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் முழுவதுமாக டிஸ்பிளே ஆஃப் நிலைக்கு போகாமல், 1Hz ரெஃப்ரெஷிங் ரேட்டில் பிரைட்னஸ் குறைந்து இருக்கும்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.