சிட்னி: ராணி எலிசபெத்தால் சிட்னி நகர மக்களுக்காக எழுத்தப்பட்ட கடிதம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனை ஆளும் பொறுப்பை ஏற்றிருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அன்னைக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் புதிய மன்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் 73 வயது நிரம்பிய மூன்றாம் சார்லஸ்.
இந்த நிலையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணி எலிசபெத்தின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் உள்ளது. இன்று அவரது உடல் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு கொண்டுவரப்படும். நாளை மறுநாள் லண்டன் கொண்டுவரப்படுகிறது. இங்கு ராணியின் உடல் சில நாட்கள் இருக்கும். வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு எதிரே நடைபெறும்.
இந்த நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் எழுதிய கடிதம் பல வருடங்களாக திறக்கப்படாமல் இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள், “ ராணி இரண்டாம் எலிசபெத் 1986-ம் ஆண்டு நவம்பர் மாதம், சிட்னி நகர மக்களுக்காக கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்தக் கடித்தத்தில் என்ன இருக்கிறது என்று ராணியின் தனிப்பட்ட ஊழியர்களுக்கே இதுவரை தெரியாது.இந்தக் கடிதம் சிட்னி நகரில் வரலாற்று கட்டிடத்தில் விலை மதிப்புடைய பொருட்களை வைக்கக் கூடிய அறையில் உள்ள கண்ணாடி பெட்டகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் எழுதிய கடித்தத்தை 2085- ஆம் ஆண்டு வரை திறந்து பார்க்க முடியாது. காரணம், அந்தக் கடிதத்தில் சிட்னி நகர மேயரை குறிப்பிட்டு, 2085-ம் ஆண்டு, நீங்கள் தேர்வு செய்ய கூடிய ஒரு நல்ல நாளில், இதனை திறக்கவும். என்று குறிப்பிட்டு அதில் எலிசபெத் ஆர் என ராணி கையெழுத்திட்டிருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
தனது ஆட்சிக் காலத்தில் சுமார் 16 முறை ஆஸ்திரேலியாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் பயணம் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.