வாரணாசி: கியான்வாபி மசூதியில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று 5 இந்துப் பெண்கள் தொடர்ந்த வழக்கானது விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மசூதியின் சார்பில் அஞ்சுமன் கமிட்டியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப், அங்கு மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று 5 இந்துப் பெண்கள் வழக்கு தொடுத்திருந்தனர். சிங்கார கவுரி அம்மன் சிலை கியான்வாபி மசூதியின் வளாகச் சுவரில் இருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அம்மனை வழிபட அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்துப் பெண்களின் மனுவினை விசாரித்த சிவில் நீதிமன்றம், மசூதிக்குள் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, மத்திய வழிபாட்டுத் தளங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ன் படி கள ஆய்வுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தாஜாமியா கமிட்டியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இவர்களது மனுவினை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியின் விசாரணைக்கு வழக்கினை மாற்றியது.
இதற்கு முன்பாக மசூதியில் நடத்தி முடிக்கப்பட்ட கள ஆய்வில், அங்குள்ள ஒசுகானாவின் நடுவில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஓசுகானாவை சீல் வைக்க வாராணாசி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ன் படி மசூதி மீது வழக்கு தொடர முடியுமா என்ற வாதத்தில் இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை செப்.12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி விஸ்வேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இந்துப் பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும், அதனை எதிர்த்து மசூதி சார்பில் அஞ்சுமன் கமிட்டி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வாரணாசியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் அமைதி உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அமைதி காக்கவேண்டும் என மதத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்று சட்டம் – ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.