பணத்தை மீட்டுக் கொடுங்க: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவாதாக மோசடி – பெண் புகார்

கோவில்பட்டி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உள்ள ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சூட்டுடையார் என்பவரின் மனைவி கோமு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
image
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கோமு செய்தியாளர்களிடம் கூறுகையில்… தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் உள்ள சாலை புதூர் மாரியப்பன் என்பவருடன் எனது கணவர் சூட்டுடையாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், மாரியப்பன் எனது கணவரிடம் எனக்கு தெரிந்த நபர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறார் அவரை அணுகி உன் மகனை வெளிநாட்டிற்கு வேலை பார்க்க அனுப்பி வைப்போம் என்று கூறினார்.
அதன் பின்பு முதலாவதாக, 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மாரியப்பன் மனைவி மங்கையர்க்கரசி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் விஜயன், சென்னையைச் சேர்ந்த எம்ஜிஆர் நம்பி ஆகிய மூவரிடமும் கொடுத்தேன். பின்னர், இரண்டாவதாக, மூன்று லட்சம் பணம் கேட்டனர். அந்த பணத்தையும் கொடுத்தேன். இதுவரை 5 லட்சத்து 65ஆயிரம் ரூபாய் வரை பணதை வாங்கியுள்ள அவர்கள் மேலும், பணம் கேட்டனர். நான் பணம் இல்லை என்று கூறினேன்.
image
ஆனால், மங்கையர்க்கரசி எனது வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து வட்டிக்கு பணம் வாங்கி தருகிறேன் என்றார். என்னால் அவ்வளவு பணத்திற்கு வட்டி கட்ட முடியாது என நான், சந்தேகமடைந்து விசாரித்ததில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏற்கனவே ஒருவரிடம் மங்கையர்க்கரசி, மாரியப்பன், விஜயன், எம்ஜிஆர் நம்பி, ஆகியோர் ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டபோது பணத்தை தருகிறேன் என ஒரு வருடத்திற்கும் மேலாக ஏமாற்றி வருகின்றனர். மேலும், மாதந்தோறும் வட்டி கட்டி வருவதால் மொத்தமாக 6 லட்சம் ரூபாய் வரை பணம் தர வேண்டும். ஆகவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரும்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததாக கூறினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.