புதுடெல்லி: சிறு விவசாயிகளே இந்திய பால் உற்பத்திக்கு ஆதாரமாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி அருகே நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால்வள உச்சி மாநாட்டினை தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதன் விவரம்: “பால் துறை மென்மேலும் வளர்ச்சி காண, பால் துறை சார்ந்த பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இந்த மாநாடு அதற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
இந்திய பால் உற்பத்திக்கு சிறு விவசாயிகளே ஆதாரம். அவர்கள்தான் மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு பாலும் பால் பொருட்களும் கிடைக்கக் காரணமாக இருக்கிறார்கள். எனவே, இந்த மாநாட்டின் பயனை கடைக்கோடியில் உள்ள சிறு விவசாயிகளும் பெற வேண்டும். பால் உற்பத்தி கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது. நாட்டில் 8 கோடி மக்கள் இதன்மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
உலகில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு நமது சிறு விவசாயிகளின் கூட்டு முயற்சியே காரணம். பால் துறையில் உலகை இயக்கும் சக்தியாக வளர்ந்த நாடுகள் இல்லை; இந்தியாதான் இருக்கிறது. இதற்கு நமது சிறு விவசாயிகளே காரணம். பால் துறையின் மகத்தான வளர்ச்சிக்கு டிஜிட்டல் புரட்சி மிக முக்கிய காரணம். டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனை விவசாயிகளுக்கு அதிக பயனை அளித்து வருகிறது” என்று அவர் கூறினார்.
இன்று தொடங்கிய இந்த மாநாடு வரும் 15-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. 1974-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால்வள உச்சி மாநாடு அதன்பிறகு தற்போதுதான் நடத்தப்படுகிறது. பால் உற்பத்தித் துறையின் தலைவர்கள், நிபுணர்கள், விவசாயிகள், கொள்கை வகுப்பாளர்கள் என பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர். இந்த மாநாட்டில் சுமார் 50 நாடுகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.