பெரியார் சிலை வாசகங்கள்: தமிழக அரசின் விளக்கத்தை கேட்ட நீதிமன்றம்!

பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், சிறிய, பெரிய நகரங்களில் பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளின் கீழ், பெரியாரின் கருத்துகள் வாசகங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், பெரியார் சிலையின் கீழுள்ள வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்படுத்துகிறது. கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா? எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.