புதுடெல்லி: “ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட நாடு, இந்தியா” என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சரான பிறகு முதன்முறையாக சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர், அங்கு அந்நாட்டின் செய்தித்தாளான சவூதி கெஜட்டிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “ஐநா பாதுகாப்பு கவுன்சிலும், ஐநா சபையும் உலக மாற்றங்களுக்கு ஏற்ப மாற வேண்டும். சர்வதேச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியை மட்டும் நோக்கமாகக் கொண்டு இயங்காமல், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அது ஏற்க வேண்டும்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கான அனைத்து தகுதிகளையும் இந்தியா கொண்டிருக்கிறது என்பதையும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 21-ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் யதார்த்தத்தை தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்றைய உலகின் யதார்த்தத்தை அது பிரதிபலிக்க வேண்டும். அது விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதில் பொதுவாக உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்து உள்ளது. இது இந்தியாவுக்கு மட்டும் சாதகமானது அல்ல; பிரதிநிதித்துவம் இல்லாத பல பகுதிகளுக்கும் சாதகமானது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும், உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும், அணு ஆயுத சக்தி கொண்ட நாடாகவும், தொழில்நுட்பங்களின் மையமாகவும், உலக நாடுகளோடு தொடர்ந்து இணைந்து பணியாற்றும் நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கான அனைத்துத் தகுதிகளையும் இந்தியா கொண்டிருக்கிறது” என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை சவுதி அரேபியா சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பட்டத்து இளவரசருக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தையும் சமர்ப்பித்தார்.
சவுதி அரேபியாவின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியா – சவுதி அரேபியா இடையேயான இருதரப்பு உறவு எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பது குறித்து விரிவாக விளக்கி இருந்தார்.