உலகளவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான வறட்சி சோமாலியா, எத்தியோப்பியாவை பாதித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மழைப்பொலிவு இல்லை. தொடர்ந்து 4 பருவங்களாக மழை பெய்யவில்லை. 5-வது பருவத்திலும் மழை பெய்யாது என்ற நிலையில் உள்ளனர். 40 ஆண்டுகளில் இப்படி ஒரு மோசமான வறட்சியை அவர்கள் சந்தித்தது இல்லை என்கின்றனர்.
2011-ஆம் ஆண்டில் சோமாலியாவில் ஏற்பட்ட வறட்சியை விட தற்போதைய நிலைமை அதிக மோசமானது என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது. 260,000 பேர் பட்டினியால் மாண்டனர். அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் 6 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இந்த எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ளது இறப்பு என்றும் கூறுகின்றனர். ஹார்ன் ஆஃப் ஆப்ரிக்கா பிராந்தியம் எப்போதும் இல்லாத அளவு பேரழிவின் விளிம்பில் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையும் பல உதவி அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
கொடுமையான பஞ்சம்
10 ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட வறட்சி, பஞ்சம் முன்பைவிட கொடுமையாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள நன் கொடையாளர்களிடமிருந்து அவர்கள் பெற்ற நிதி முடியும் நிலையில் உள்ளதாகவும், 22 மில்லியன் பேர் உணவின்றித் தவிக்கக்கூடும் எனவும் சோமாலிய அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா ஆகியவை 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியை இந்த அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் சந்திக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மில்லியன்கணக்கான மக்கள் உணவுக்கு என்ன செய்வார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்
உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் ரஷ்யா படையெடுத்தது. இதனால் கிட்டத்தட்ட அனைத்து உணவு விநியோகங்களையும் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உக்ரைன் மீதான போர், கோதுமை இறக்குமதி கிடைப்பதில் உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்க செய்தது. இதனால் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்தது.
ஆப்பிரிக்க கண்டத்தின் கொம்பு பகுதியில் அமைந்துள்ள சோமாலியாவில், நிலையான அரசு அமையாதது, தொடர்ந்து நடந்து வரும் உள்நாட்டுச் சண்டைகள், மழையின்மை ஆகியவை கடும் வறட்சிக்கு காரணமாகியுள்ளன.
என்ன நடக்கிறது?
கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சியால் லட்சக்கணக்கான கால்நடைகள் பலியாகியுள்ளன, பயிர்கள் நாசமாகியுள்ளன. எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா முழுவதும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை தேவையான நிலையில் உள்ளனர்.
ஜிபூட்டி, எரித்திரியா போன்ற பிராந்தியத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பிராந்தியத்தில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஐநாவின் உலக உணவுத் திட்டம் (WFP) நெருக்கடியைச் சமாளிக்க அடுத்த ஆறு மாதங்களில் 473 மில்லியன் டாலர்கள் தேவைப்படும் என உதவி கேட்டு உலக நாடுகளிடம் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஜிபூட்டி, எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் கால்நடை வளர்ப்போருக்கு உதவ உலக வங்கி 327.5 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்தது.
பஞ்சத்தில் இறக்கும் அபாயம்
ஜூன் மாதத்தில், உலக வங்கியின் கூற்றுப்படி, ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவில் 10 மில்லியன் குழந்தைகள் உட்பட 66.4 மில்லியன் மக்கள் கடும் பஞ்சத்தால் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் என்று கணித்தனர். WFP இன் கூற்றுப்படி, பட்டினியால் வாடும் ஆபத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளது.
எத்தியோப்பியாவில், 20.4 மில்லியன் மக்களும், சோமாலியாவில், 15 மில்லியன் மக்களும், பஞ்சத்தின் கடும்பசியில் உள்ளனர் நிலைமைகள் அப்படியே இருந்தால், “வரவிருக்கும் மாதங்களில் பஞ்சத்தின் உண்மையான ஆபத்தை” எதிர்கொள்வார்கள்.
கென்யாவில், அரை மில்லியன் மக்கள் பசி நெருக்கடியின் விளிம்பில் உள்ளனர், மேலும் உதவி தேவைப்படும் கென்யர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் நான்கு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது என்று WFP தெரிவித்துள்ளது.
உயிர் வாழ்வதற்கான நம்பிக்கையை இழந்த மக்கள்
“இந்த வறட்சி நெருக்கடிக்கு இன்னும் முடிவே தெரியவில்லை. எனவே உயிர்களைக் காப்பாற்றவும், மக்கள் பேரழிவு நிலைகளில் பசி மற்றும் பட்டினியில் மூழ்குவதைத் தடுக்கவும் தேவையான ஆதாரங்களைப் பெற வேண்டும்” என்கிறார் WFP நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி.
“ஒரு மனிதாபிமான பேரழிவைத் தடுக்க முன்கூட்டியே செயல்படுவது முக்கியமானது, என்பதை கடந்த கால அனுபவத்திலிருந்து நாங்கள் அறிவோம், ஆனால் இன்றுவரை நிதிப் பற்றாக்குறையால் பணியைத் தொடங்குவதற்கான எங்கள் திறன் குறைவாகவே உள்ளது” என்கிறார் WFP இன் கிழக்கு ஆப்பிரிக்காவின் பிராந்திய இயக்குனர் மைக்கேல் டன்ஃபோர்ட்.
“இந்த நிலைமை குறித்து WHO மிகவும் கவலை கொண்டுள்ளது. இது பல குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கான அவநம்பிக்கையான நடவடிக்கைகளை எடுக்க வழிவகுக்கிறது, ” என்கிறார் உலக சுகாதார அமைப்பின் (WHO) செய்தித் தொடர்பாளர் கார்லா ட்ரைஸ்டேல்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சோமாலியாவில் பட்டினியால் மடிந்தவர்கள் ஏராளம்.. சோமாலியாவின் பொருளாதாரத்திற்கு துருக்கி பெருமளவு உதவி செய்து வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சோமாலியாவுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் துருக்கி 1 பில்லியன் டாலர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.