புதுச்சேரி: ஜிப்மரில் தினக்கூலி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் 64 துறைகளில் பணிகள் பாதிக்கப்ட்ட நிலையில் உட்புற, வெளிப்புற நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரி, ஜிப்மரில் 566 தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைப் போன்று பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் தொழிலாளர் தீர்ப்பாயம் சென்று முறையிட்டனர்.
அதில் 5 வருடம் ஜிப்மரில் தினக்கூலியாக பணியாற்றுபவர்களை பணிநிரந்தரம் தீர்ப்பாயம் ஆணைப் பிறப்பித்த நிலையில் அதை செயல்படுத்தாத ஜிப்மர் நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் இத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. இதன்மீதான விசாரணை நிலுவையில் உள்ளன. இதனிடையே ஜிப்மரில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் இன்று திடீரென பணிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து ஜிப்மர் நிர்வாக பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு ஜிப்மர் மருத்துவமனை ஒர்க்கர்ஸ் யூனியன் சங்கத் தலைவர் சிவசங்கரன், பொதுச்செயலாளர் செல்வதுரை, பொருளாளர் டேனியல்சாமி ஆகியோர் தலைமையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளம் உயர்வு, பணிநிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் புதிய அடையாள அட்டை, சம்பள ரசீது வழங்குதல், கோப்புகளை ஜிப்மர் நிர்வாகத்துக்கு மாற்றுதல், ஒன்றிய அரசு அறிவித்த டிஏ அலவன்ஸ் வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பாக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், இணை இயக்குனர் கிருஷ்ணகோபால் கோயல் ஆகியோரிடம் முறையிட்ட நிலையில், எய்ம்ஸ் நேரடியாக ஒன்றிய சுகாதார அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஆனால் ஜிப்மர் மருத்துவமனையோ ஜிப்மர் நிர்வாக தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும் கூறி கோரிக்கையை நிராகரித்து விட்டதை சுட்டிக் காட்டிய ஊழியர்கள்,
தற்போது தங்களது கோரிக்கையை நிர்வாகம் ஏற்கும்வரை போராட்டத்தை தொடரப் போவதாக எச்சரித்தனர். ஜிப்மர் தினக்கூலி ஊழியர்களின் ஒட்டுமொத்த போராட்டம் காரணமாக வாரத்தின் முதல்நாளான இன்று அங்கு நோயாளிகளுக்கான அட்டை போடுதல், சலவை, சமையல், டெலிவரி உள்ளிட்ட 64 துறைகளில் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அங்கு சிகிச்சை பெறவந்த வெளிப்புற, ஏற்கனவே சிகிச்சையில் இருக்கும் உட்புற நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையொட்டி அசம்பாவிதம் தடுக்க ஜிப்மர் நிர்வாக பிரிவு அலுவலகம் முன்பு கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.