திருப்பூர், செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரை கடந்த 15 நாள்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது. தடுப்பூசி போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு தலைமை மருத்துவமனை வரை அலைந்து திரிந்து எங்கேயும் மருந்து கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளைச்சாமியின் நண்பரும், சமூக ஆர்வலருமான பழனிக்குமார் கூறுகையில்,
“வெள்ளைச்சாமி என்னைச் சந்திப்பதற்காக அங்கேரிபாளையம் பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவரை நாய் கடித்துவிட்டது. உடனடியாக அருகில் 3 கி.மீ தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, ‘மருந்து இல்லை’ எனக் கூறிவிட்டனர்.
அதையடுத்து 8 கி.மீ தொலைவில் உள்ள பெருமாநல்லூர் அரசு மருத்துவமனை சென்றார். அங்கும், ‘மருந்து இல்லை’ என்றனர். 12 கி.மீ தொலைவில் உள்ள வேலம்பாளையம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கும் இல்லை. இதையடுத்துதான் திருப்பூர் அரசு மருத்துவமனை சென்றோம்.
நாங்கள் சென்றபோது மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 7 பேர் வந்திருந்தனர். எல்லோருமே அவர்களின் பகுதிகளில் ஊசி கிடைக்கவில்லை என சொல்லித்தான் அங்கு வந்திருந்தனர். ஒருவழியாக அங்கு ஊசி போட்டுவிட்டோம்.
அடுத்த ஊசிக்கு ஒருவரின் தொடர்பு எண் கொடுத்தனர். அவர் எடுக்கவில்லை. மீண்டும் எல்லா மருத்துவமனைகளுக்கும் சென்றோம். அதன் பிறகுதான் மருத்துவமனை முதல்வர், கலெக்டர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆகியோரிடம் பேசினோம். இணை இயக்குநர், ‘மருந்து இருப்பில் உள்ளது’ என்கின்றார்.
முதல்வரோ, ‘நிதி பற்றாக்குறையால் மருந்து வாங்கவில்லை. தற்போது எங்கள் கைவசம் மருந்து இல்லை’ என்கிறார். அதிகாரிகளுக்குள் நடக்கும் பனிப்போரால் மக்களை அலைக்கழிக்கின்றனர்.
இந்த வலியுடனே வெள்ளைச்சாமி பல இடங்களுக்கு அலைந்தார். தற்போதுவரை 4 ஊசிகளில், 2 ஊசிதான் போடப்பட்டுள்ளன. இவரைப் போல நாய்கடியால் பாதிக்கப்பட்டு பலர் ஊசி போட முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக ஊசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசன் கூறுகையில், “கடந்த மாதம் அவர்கள் வந்தபோது தான் ஊசி இல்லை. இப்போது மருந்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட யார் வந்தாலும் சிகிச்சை வழங்கப்படும்” என்றார்.