பீஜிங்: உஸ்பெஸ்தானில் நடக்கும் ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி வருகிற 14-ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டு செல்கிறார். இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது.
உக்ரைன் போர், தைவான் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் முதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்த மாநாடு நேரடியாக நடைபெறுவது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெஸ்கிதான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ( SCO) வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
உச்சி மாநாடு
உஸ்பெஸ்தானில் சமர்கண்ட் நகரில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் வரும் காலத்தில் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்து பிரச்சினைகள் ஆகியவை குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக வரும் 14 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.
15 நாடுகளின் தலைவர்களுக்கு
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு முதல் முறையாக நேரடியாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் ஆண்டு கிர்கிஸ்தன் நாட்டின் பிஷ்கெக் நகரத்தில் இந்த மாநாடு நேரடியாக நடைபெற்றது. அதன்பிறகு தற்போதுதான் நேரடியாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உள்பட 15 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சந்திப்பு
இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது. சீன அதிபரை கடந்த 2019 ஆம் ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்து இருந்தார். அதன்பிறகு இரு தலைவர்களுக்கு இடையே நடைபெறும் சந்திப்பு இதுவாகத்தான் இருக்கப் போகிறது. அதேபோல், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு முதல் முறையாக அந்நாட்டின் அதிபர் புதினை பிரதமர் மோடி நேரடியாக சந்திக்க இருக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பாரா
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை சந்திப்பாரா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. சமர்கண்ட் உச்சி மாநாட்டின் போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஈரான் முறைப்படி உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பின் அடுத்த தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. உக்ரைன் போர், தைவான் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் முதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்த மாநாடு நேரடியாக நடைபெறுவது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
நிரந்தர உறுப்பு நாடுகளாக
ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெஸ்கிதான் ஆகிய நாடுகள் கடந்த 2001 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 2017 ஆம் ஆண்டு நிரந்தர உறுப்பு நாடுகளாக இணைத்துக்கொள்ளப்பட்டன.