திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அஷ்ட லிங்கம் கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இந்தாண்டு 1,000 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். இதற்காக ₹500 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னி ஸ்தலமாக விளங்கும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு 2,668 உயரமுள்ள அண்ணாமலையார் மலையை கிரிவலம் செல்கின்றனர். இந்த மலையை சுற்றி 8 திசைகளிலும் கிரிவல பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேரலிங்கம், ஈசான்ய லிங்கம் கோயில்கள் உள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்கள் இக்கோயிலில்களிலும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இக்கோயில்கள் அனைத்தும் அண்ணாமலையார் கோயிலின் உப கோயில்களாக உள்ளது. இந்த அஷ்ட லிங்க கோயில் உள்பட கிரிவல பாதையில் உள்ள சூரிய லிங்கம் கோயில், சந்திர லிங்கம் கோயில்களையும் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்வதற்காக ₹4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இக்கோயில்களில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்க பூஜை மாட வீதியில் உள்ள இந்திர லிங்கம் கோயிலில் இன்று காலை நடந்தது.
அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. இந்த பூஜையில் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அஷ்ட லிங்கம் உள்பட 10 கோயில்களிலும் திருப்பணிகள் துவங்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்ததும் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும்.