எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார். மேற்கு கடற்படையின் தலைமைத் தளபதி அஜேந்திர பஹதுர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
‘தரகிரி’ போர்க்கப்பலின் அறிமுகத்திற்குப் பிறகு எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு கப்பல்களுடன் இணைந்து மூன்று கப்பல்களும் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும்.
எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்களால் கட்டமைக்கப்படும் ஏழு பி17ஏ ரக போர்க்கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன. ரேடாருக்குத் தென்படாமல் செயல்படும் போர்க்கப்பல் போன்ற சிக்கலான முன்னணி கப்பல்களின் உள்நாட்டு கட்டுமானம், கப்பல் கட்டும் துறையில் நாட்டை ஓர் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மேம்பாடு, இந்திய கப்பல் கட்டும் தளங்கள், அதன் துணை ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்களில் வேலை வாய்ப்பு உருவாக்கம் போன்ற கூடுதல் பலன்களை இது வழங்கும். மேலும் திட்டம் 17ஏ போர்க்கப்பலின் 75% ஆர்டர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது, தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.