அயோத்தியா: அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட ரூ.1,800 கோடி செலவாகும் என்று ராமர் கோயிலை கட்ட அமைக்கப்பட்ட அறங்காவலர் குழு கணித்துள்ளது.
ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரம் என்ற அறங்காவலர் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு தான் கோயில் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில ஃபைசாபாத் சர்க்யூட் ஹவுஸில், அறங்காவல் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான செலவு குறித்து கணிக்கப்பட்டது. அப்போது, சுமார் ரூ.1800 கோடி செலவாகலாம் என்று கணிக்கப்பட்டது.
அறங்காவலர் குழுவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், “நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்னர் அறங்காவலர் குழு பின்பற்ற வேண்டிய சட்டத் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டன. ராமர் கோயிலில் என்னவெல்லாம் இடம்பெறும், ராமர் கோயிலில் ராமர் சிலையைத் தாண்டி இந்து மத ஜீயர்கள், மடாதிபதிகள் மற்றும் ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள முக்கியக் கதாபாத்திரங்கள் இடம்பெறும். குழுவில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 14 உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்” என்றார்.
2023-க்குள் அயோத்தியில் ராமர் கோயிலில் கருவறை கட்டப்பட்டு டிசம்பரில் பக்தர்களுக்கு அனுமதியளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கட்டுமானக் குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.