டெல்லி தசரா பண்டிகையில் ராவணன் உருவத்தை எரிக்கும் பிரபாஸ்; இதிலும் பட புரொமோஷனா?

ராமாயணத்தின்படி ஸ்ரீ ராமர் ராவணனை வென்று அயோத்திக்குத் திரும்பிய வெற்றியைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவதுதான் வட இந்தியாவின் தசரா பண்டிகை. இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் வெவ்வேறு விதமாகக் கொண்டப்படும் இந்த திருவிழா வடமாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.

அந்த வகையில் டெல்லியில் வரும் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை ‘தசரா பண்டிகை’ கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டை மைதானத்தில் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் போல பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருகிறது.

தசரா பண்டிகை

இந்நிலையில் தசரா பண்டிகையின் கடைசி நாள், அக்டோபர் 5ம் தேதி நவராத்திரி அன்று பிரமாண்டமாக தயார் செய்யப்பட்ட இராவணன், கும்பகர்ணன் போன்றவர்களின் உருவ பொம்மையை வில் அல்லது தீப்பந்தம் மூலம் கொளுத்துவது வழக்கம். முக்கியத் தலைவர்கள் இந்தக் கடைசி நாள் விழாவில் கலந்து கொண்டு இந்த உருவ பொம்மையை எரித்து விழாவை நிறைவு செய்வார்கள்.

அந்த வகையில் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான தென்னிந்திய நடிகரான பிரபாஸ், அக்டோபர் 5ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இந்த தசரா விழாவில் கலந்து கொண்டு இராவணன் உருவ பொம்மை எரித்து விழாவை சிறப்பிக்க உள்ளதாக விழாவை நடத்தும் லவ் குஷ் (Lav Kush) ராம்லீலா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

பிரபாஸ்

இது குறித்துக் கூறிய லவ் குஷ் ராம்லீலா கமிட்டியினர், “நடிகர் பிரபாஸ் தற்போது ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் ஆதிபுருஷ் (Adipurush) என்னும் படத்தில் ராமர் வேடத்தில் நடித்து வருகிறார். எனவே இந்த வருடம் ராவணன் உருவத்தை எரிக்க சிறந்த நபர் அவர்தான் என்று கருதியுள்ளோம். வழக்கம் போல ராவணன், கும்பகர்ணன் போன்றோரின் உருவங்கள் விழாவில் நிறுத்தப்பட்டு இருக்கும். அதை நடிகர் பிரபாஸ் ஒவ்வொன்றாக அம்புகள் எய்தி எரிப்பார்” என்று கூறியுள்ளனர்.

நடிகர் பிரபாஸ் ராமாயண புராணத்தைத் தழுவி எடுக்கப்படவுள்ள `ஆதிபுருஷ்’ (Adipurush) என்ற படத்தில் ஸ்ரீ ராமராக நடிக்கிறார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிவரும் இப்படத்தை இயக்குநர் ஓம் ரவுத் (Om Raut) இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் நடிகர் பிரபாஸ், டெல்லி தசரா விழாவில் கலந்து கொண்டு இராவண உருவ பொம்மையை எரிப்பது படத்தின் புரொமோஷனுக்கு உதவியாக இருக்கும் என்று திரைவட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.