12500 ச.அடி ரூ. 50000 வாடகை 10 ஆண்டு குத்தகை… 75% பங்கு Silly Souls பாருக்கு உரிமையாளர் யார் ? ஆர்.டி.ஐ மூலம் தகவல் கிடைத்தது…

இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் உரிமம் பெற்று Silly Souls என்ற பெயரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி கோவாவில் பார் நடத்தி வருவதாக இரண்டு மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.

ஐரிஸ் ரோட்ரிகியூஸ் என்ற வழக்கறிஞர் ஆதாரங்களுடன் வெளியிட்ட இந்த புகாரை மறுத்த ஸ்ம்ரிதி இரானி தனது மகளுக்கும் இந்த பாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ம்ரிதி இரானியின் கணவர் சுபின் இரானி இயக்குனராக இருக்கும் நிறுவனத்திற்கும் சில்லி சோல் பாருக்குமான ஜி.எஸ்.டி. தொடர்பு குறித்து தகவல் வெளியானது.

சில்லி சோல் சாயம் வெளுக்க துவங்குவதை அறிந்த ஸ்ம்ரிதி இரானி இதனை மறைக்க நாடாளுமன்றத்தில் தாண்டவமாடினார்.

தவிர, சில்லி சோல்ஸ் பார் விவகாரத்தில் ஸ்ம்ரிதி இரானி குடும்ப உறுப்பினர்களின் பங்கு குறித்து சர்ச்சை பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சுபின் இரானி தொடர்புடைய நிறுவனங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டது.

இந்த தகவல்கள் அடிப்படையில், ஸ்ம்ரிதி இரானியின் கணவர் சுபின் இரானி மற்றும் இவரது மகன் சோஹர் இரானி ஆகியோர் இயக்குனராக இருக்கும் உக்ரயா மெர்கன்டைல் என்ற நிறுவனத்தில் மற்றொரு இயக்குனரான ராகுல் வோரா சில்லி சோல்ஸ் பாரை நடத்தும் எய்ட்-ஆல் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருப்பது தெரியவந்துள்ளது.

சுபின் இரானி இயக்குனராக இருக்கும் உக்ரயா மெர்கன்டைல் நிறுவனத்தின் 50 சதவீத முதலீடு மற்றும் இவரது மற்றொரு நிறுவனமான உக்ரயா அஃரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 25 சதவீத முதலீடு என மொத்தம் 75 சதவீத முதலீட்டுடன் எய்ட்-ஆல் என்ற நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

எய்ட்-ஆல் நிறுவனத்தில் சுபின் இராணியுடன் தொடர்புடைய ராகுல் வோரா தவிர உக்ரயா அஃரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குனராக உள்ள மங்கேஷ் ஜோஷியும் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவர் தவிர, கீதா வஜானி மற்றும் கனிகா சேத் ஆகியோரும் எய்ட்-ஆல் நிறுவனத்தில் இயக்குனர்களாக உள்ளனர். இதில் எய்ட்-ஆல் நிறுவனம் சார்பாக பார் நடத்த தேவையான உரிமங்களை வாங்க கனிகா சேத் அங்கீகரிக்கப்பட்டார்.

எய்ட்-ஆல் புட் அண்ட் பீவரேஜஸ் என்ற இந்த நிறுவனம் வடக்கு கோவா-வில் உள்ள அஸ்ஸகாவ் பகுதியில் அந்தோனி டகமா என்பவருக்கு சொந்தமான இடத்தில் பார் மற்றும் உணவகம் நடத்த குத்தகைக்கான ஒப்பந்தத்தை இந்த ஆண்டு ஜனவரி 7 ம் தேதி கையெழுத்திட்டுள்ளது.

2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் 10 ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ள எய்ட்-ஆல் நிறுவனம், 12500 சதுர அடியில் நவீன வசதிகளுடன் சொகுசாக அமைந்திருக்கும் இந்த உணவகத்துடன் கூடிய பாருக்கான மாத வாடகையாக ரூ. 50,000 த்தை கொடுத்து வருகிறது.

மும்பையைச் சேர்ந்த சவுண்ட் என்ஜினியரான இந்த நில உரிமையாளர் அந்தோனி டகமா 2021 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி மரணமடைந்த நிலையில் 2022 ம் ஆண்டு ஜூன் மாதம் அந்தோனி டகமா பெயரிலேயே இந்த பாருக்கான உரிமையை புதுப்பிக்க விண்ணப்பம் செய்ததை அடுத்து இந்த விவகாரம் பூதாகாரமானது.

யூ-டியூபர் குணால் விஜய்கரின் யூ-டியூப் சேனலில் இந்த சொகுசு பார் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி “கோவா ஒரு பெரிய சுற்றுலா மையமாக இருந்தபோதிலும், சர்வதேச அளவிலான உயர்தர உணவுகளில் பின்தங்கியிருக்கிறது. கோவாவின் சில்லி சோல்ஸ் உணவுக்கான முக்கிய இடமாக விரைவில் மாறும்” என்று தெரிவித்திருந்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.