காங்கிரஸில் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், கட்சியின் எம்.பி ராகுல் காந்தி `பாரத் ஜோடோ’ எனும் யாத்திரையை தொடங்கியிருக்கிறார். ராகுல் காந்தி, கடந்த வாரம் புதன்கிழமையன்று கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை மூலம் காஷ்மீர் வரை மக்களை நேரில் சந்திக்கவிருக்கிறார்.
இதுவொருபக்கம் நடந்துகொண்டே இருக்க, பா.ஜ.க-வினர் பலரும் `பாரத் ஜோடோ’ யாத்திரையையும், அதில் ராகுலின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கி விமர்சித்துவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்கூட, யாத்திரையின்போது ராகுல் அணிந்திருந்த டி-ஷர்ட்டின் விலை ரூ.41,000 எனக் குறிப்பிட்டு விமர்சித்துவந்தனர்.
அதற்கு காங்கிரஸும், “ ஆடைகளைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், மோடியின் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள சூட் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் விலையுள்ள கண்ணாடி பற்றியும் பேசப்படும்” என்று உடனடியாக விமர்சித்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் இந்த விவகாரத்தில் அமித் ஷாவையும், பா.ஜ.க-வினரையும் ஒருசேர விமர்சித்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “பாரத் ஜோடோ யாத்ரா-வில் அவர்களுக்கு என்னதான் பிரச்சனை? உள்துறை அமைச்சர் ரூ.80,000 மஃப்ளரையும், பா.ஜ.க-வினர் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான சன்கிளாஸையும் அணிந்துகொண்டு ராகுல் காந்தியின் டி-சர்ட்டைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள், டி-சர்ட்களில் அரசியல் செய்கிறார்கள். மேலும், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பிற தலைவர்கள் அனைவரும் தங்களின் வேலையை விட்டுவிட்டு ராகுல் காந்தியைத் தாக்குகிறார்கள்” என விமர்சித்தார்.