தமிழ்நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். இதையடுத்து, செப். 10 முதல் தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இதில், வீட்டுப் பயன்பாடு தவிர தொழில்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டுமான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6.50 என்ற விலையிலிருந்து ரூ. 12 என உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் மின்கட்டண உயர்வால், கொரோனா ஊரடங்கு, ஜிஎஸ்டி, மூலப்பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்கெனவே நலிவை சந்தித்துள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என, அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் தொழிற்சங்கத்தினரும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நுகர்வோர் மீது மறைமுக விலை உயர்வு விதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
ஒரு யூனிட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தைவிட நிலையான கட்டணம் (Fixed Charge), உச்ச நேரத்திற்கு (Peak Hours) கூடுதல் கட்டணம் என, மறைமுக கட்டணங்களே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் சிறு, குறு, நடுத்தர தொழில்களில் ஈடுபடுவோர்.
- தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் பிரச்னை தீருமா?
- இந்தப் பெண்களை சொந்தக்காலில் நிற்கவைத்தவை காளான்கள்தான் – எப்படி?
- தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் சேருவது எப்படி? பலன்கள் என்ன ?
நுகர்வோர் மீதான சுமை
கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி கூறுகையில், “மின்கட்டண உயர்வைவிட நிலையான கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது, சிறு, குறு தொழில்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அதன்படி, 50 கிலோவாட்டுக்கு நிலையான கட்டணம் ரூ.75 ஆகவும், 51-112 கிலோவாட்டுக்கு ரூ.150 ஆகவும், அதற்கும் மேல் நிலையான கட்டணம் ரூ.550 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, உச்ச நேரமான (Peak Hour) காலை 6 மணிமுதல் 10 மணிவரையும் மாலை 6 மணி முதல் 10 மணிவரையும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மின்கட்டணத்துடன் கூடுதலாக 25% கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, புதிய இணைப்பு பெறுவதற்கு கூடுதல் கட்டணம் என, மறைமுக கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சிறு, குறு, நடுத்தர தொழில்களை வெகுவாக பாதிக்கும்” என தெரிவித்தார்.
மின்கட்டண உயர்வில் சுமார் 25 சதவீத உயர்வை நுகர்வோர் மீது விதிக்கும் நிலை ஏற்படும் எனவும், இதனால், வாங்கக்கூடிய சக்தி நுகர்வோருக்கு இல்லாமல் போய்விடும் எனவும் சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
“வெளிமாநிலங்களுடன் போட்டியில் பின்தங்கி விடுவோம்”
கோவையில் சுமார் 250 தொழிலாளர்களை வைத்து கருவிகள் பழுதுபார்ப்பு ஆலை மற்றும் வார்ப்பு ஆலை நடத்திவரும் நாகராஜ் என்பவர் கூறுகையில், “எங்களின் இரண்டு ஆலைகளுக்கும் சேர்த்து முன்பு மாதம் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் மின்கட்டணம் வரும். இப்போது ரூ.70 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு சேவையின் விலையை உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 40 சதவீத மின்கட்டண உயர்வில் 25 சதவீத உயர்வை நுகர்வோர் மீது விதிக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
பல்வேறு காரணிகளால் நலிவடைந்துள்ள சிறு, குறு தொழில்கள் பல மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்த அவர், தான் நடத்திவரும் கருவிகள் பழுதுபார்ப்பு ஆலையை விற்பதற்கு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், நுகர்வோர் மீது விலை உயர்வை விதிப்பது வெளிமாநிலங்களில் தங்களின் தொழிலை கடுமையாக பாதிக்கும் என்ற கவலையையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் ஏழு தொழிலாளர்களை கொண்டு சி.என்.சி இயந்திரம் உற்பத்தி தொழிற்சாலை நடத்திவரும் லோகநாதன் என்பவர் கூறுகையில், “சிட்கோவில் பெரும்பாலானவை வார்ப்பு மற்றும் சி.என்.சி தொழிற்சாலைகள்தான். இவை இரண்டும் மின்சாரம் அடிப்படையில் செயல்படுபவை. மின்கட்டண உயர்வால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.
சமீபத்திய மின்கட்டண உயர்வை ஈடுகட்ட நுகர்வோர் மீது விலையை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதனால், வெளிமாநிலங்களில் எங்களின் தொழிலை இழக்கும் அபாயத்தில் உள்ளோம். கர்நாடகாவில் சிறு தொழில்களுக்கு மின்கட்டணத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், அதற்கு நேர்மாறாக இங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
ஒரு உற்பத்தி பொருள் அல்லது சேவையின் விலையை, மூலப்பொருட்களின் விலை, வேலையாட்களின் கூலி உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கிறோம். மின்கட்டண உயர்வால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். உதாரணமாக, எனக்கு ஆர்டர் கொடுக்கும் நிறுவனம், பொருள் அல்லது சேவை விலையை இந்திய அளவில் ஒப்பிட்டுதான் எனக்கு கொடுப்பார்கள். எங்கள் மாநிலத்தில் மின்கட்டணம் உயர்ந்துவிட்டது, அதனால் விலை உயர்ந்துவிட்டது எனக் கூறினால் எந்த நிறுவனமும் அதனை ஏற்றுக்கொள்ளாது. எங்களின் உற்பத்தி பொருட்களுக்கு நாங்களே விலை நிர்ணயித்தாலும் போட்டியாளர்கள் என்ன நிர்ணயிக்கிறார்களோ அதை ஒத்துத்தான் விலையை நிர்ணயிக்க முடியும். அதனைவிட அதிகமாக விலையை ஏற்ற முடியாது” என தெரிவித்தார்.
வேலையிழப்பு அபாயம்
கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 40,000 – 50,000 சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்ளன. இதனால், 5 லட்சம் பேர் கோவையில் மட்டுமே நேரடி வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அதேபோன்று, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஆடை தொழில், சென்னையில் ஆட்டோமொபைல் என, தமிழ்நாடு முழுவதும் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறு, குறு, நடுத்தர தொழில்களில் நேரடி வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ‘பீக் ஹவர்’ கூடுதல் மின்கட்டணத்தால் வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக திறனற்ற தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து லோகநாதன் கூறுகையில், “உச்ச வேலைநேரத்தில் 25 சதவீதம் கூடுதல் கட்டணம் விதித்திருப்பது, வேலைக்கு ஆட்களை நியமிப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்தும். சி.என்.சி இயந்திர தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததால், மாலை நேரத்தில் பணிபுரிவதற்கு மட்டும் தற்போது ஆட்களை நியமிக்கிறோம். அவர்கள் மாலை 6 மணி முதல் 9 மணிவரை வேலை செய்வார்கள். ஆனால், இந்த கட்டண உயர்வால், உச்ச வேலைநேரத்தில் உற்பத்தியை நிறுத்திவைக்கும் நிலை ஏற்படும். இதனால், பெரும்பாலானோருக்கு வேலையிழப்பு ஏற்படும்” என கூறினார்.
மின்கட்டண உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி ஆகிய காரணங்களால் உற்பத்தியில் தமிழ்நாடு சரிவை சந்தித்தால் மற்ற வெளிமாநிலங்களுடன் போட்டியில் பின்தங்கும் நிலை ஏற்படும் என்கிறார், கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான கொடிசியாவின் தலைவர் திருஞானம்.
அவர் கூறுகையில், “இந்தியாவிலேயே தமிழ்நாடு உற்பத்தியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. காப்பர், அலுமினியம், பிளாஸ்டிக் உள்ளிட்ட உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் வட இந்தியாவில் இருந்துதான் வாங்குகிறோம். நம் பலம் உற்பத்தி தான். பம்ப்புகளை எடுத்துக்கொண்டால் முன்பு 75% பம்ப்புகள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கோவையிலிருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது அது 60 சதவீதமாக குறைந்துவிட்டது.
மற்ற மாநிலங்களைவிட மின்கட்டணம் தமிழ்நாட்டில் குறைவு என ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால், இப்போது அதுவும் உயர்ந்துவிட்டால் மூலப்பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து உற்பத்தி பெருமளவில் குறையும்.
மூலப்பொருட்கள் வைத்துள்ள மாநிலங்களும் உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதனால், மற்ற மாநிலங்களுடனான போட்டியில் நாம் பின்னே தள்ளப்படுவோம்” என்றார்.
இதே கருத்தை தெரிவித்த நாகராஜ், “வார்ப்பு தொழிலில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தான் எங்களுக்குப் போட்டி. ஏற்கெனவே உற்பத்திப் பொருளின் விலை உயர்வால் பல ஆர்டர்கள் ராஜ்கோட்டுக்கு சென்றுவிட்டன. அங்குள்ள தொழிற்சாலைகளுடன் எங்களால் போட்டியிட முடியவில்லை” என்றார்.
மின்கட்டண உயர்வால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளால் பம்ப் மோட்டார், கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றின் விலை உயரும் என்கிறார் அவர்.
“உணவுப்பொருட்களின் விலையும் உயரும்”
இதனால் தொழிற்சாலைகள் மட்டுமின்றி பேக்கரி, ஹோட்டல் உணவுப்பொருட்களின் மீதும் மறைமுக விலை உயர்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஓராண்டாக 16-18 வேலையாட்களைக் கொண்டு பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயச்சந்திரன் என்பவர் கூறுகையில், “என்னுடைய பேக்கரியிலிருந்து மருத்துவமனை கேன்டீன்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கேன்டீன்களுக்கு பன், பிரெட் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஓராண்டாகவே பேக்கரி தொழிலுக்கான மைதா, எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அதனால், ஏற்கெனவே விற்பனை பொருட்களின் விலையை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளோம். இந்த மின்கட்டண உயர்வால் மீண்டும் விலையை உயர்த்த முடியாது. ஆண்டுக்கு ஒருமுறைதான் விலையை உயர்த்த வேண்டும் என ஆர்டர் எடுப்பவர்கள் கூறுகின்றனர். மின்கட்டண உயர்வால் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் ‘பன்’, இனி 15 ரூபாயாகும். விலையை உயர்த்தவில்லையென்றால் எங்களின் தொழில் நலிவடைந்துவிடும்” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்