விளங்கனூர் பகுதியில் சாலை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி: இழப்பீடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

செய்யூர்: விளங்கனூர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டிய பெரிய பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் விழுந்து பரிதாபமாக பலியானார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர், இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த விளங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (25). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து சித்தாமூர் மார்க்கமாக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை விரிவாக்கப்பணிக்காக,  சாலையில் தோண்டி வைக்கப்பட்டிருந்த பெரிய பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.

இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். செய்யூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்ாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சாலை பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் பள்ளம் உள்ள பகுதியில்  முன்னெச்சரிக்கை பலகை மற்றும் பாதுகாப்பு எதுவும் செய்யாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், அலட்சியமாக இருந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் செய்யூர் – சித்தாமூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த மதுராந்தகம் தாசில்தார் மற்றும் செய்யூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்ததோடு இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வாங்கி தருவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதி 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.