போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் 3 கிமீ ஓடி வந்து ஆபரேஷன் செய்த பெங்களூரு டாக்டர்: நோயாளி உயிரை காப்பாற்றினார்

பெங்களூரு: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெங்களூரு டாக்டர் ஒருவர் தான் மேற்கொள்ள வேண்டிய ஆபரேஷனுக்கு நேரம் ஆகிவிட்டதால் சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு ஓடியே மருத்துவமனைக்கு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவை சேர்ந்த டாக்டர் கோவிந்த் நந்தகுமார். இவர் மணிப்பால் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நிபுணராக இருக்கிறார். ஆக.30ம் தேதி இவர் பெண் நோயாளி ஒருவருக்கு கணையத்தில் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்ய நேரம் ஒதுக்கினார். இவர் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வந்த போது சர்ஜாபூர்-மாரத்தஹள்ளி சாலையில் மழை நீர் தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் டாக்டர் பதட்டமடைந்தார்.

நேரத்துக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அப்பெண்ணின் தலையெழுத்து என்னவாகும் என்ற கவலை அவரை வாட்டியது. இனி காரில் செல்வது பயனற்றது. சொந்த கால்களை நம்ப வேண்டியது தான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். காரை சாலையில் அப்படியே விட்டு இறங்கி ஓட ஆரம்பித்தார். இப்படி 3 கி.மீ தூரம் 45 நிமிடங்கள் அவர் ஓடி குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனையை அடைந்தார். அங்கு சரியான நேரத்தில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடமை கண் போன்றது என்று உணர்த்தியுள்ள டாக்டர் நந்தகுமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.