மைதானத்தில் இலங்கை கொடியுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கவுதம் கம்பீர்- வைரலாகும் வீடியோ

துபாய்:

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மைதானத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு செயலைச் செய்தார். மைதானத்தில் ஆதரவாளர்கள் முன்னிலையில் கம்பீர் இலங்கை நாட்டின் கொடியை கையில் எடுத்து அசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இதை கண்ட ஒட்டுமொத்த அரங்கமும் அவருக்காக பலத்த கரகோஷம் எழுப்பத் தொடங்கியது. இந்த சம்பவத்தின் வீடியோவை கம்பீர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் அணி. உண்மையிலேயே தகுதியானவர்கள். வாழ்த்துக்கள் ஸ்ரீலங்கா என குறிப்பிட்டு இருக்கிறார். அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.