வாகனங்களுக்கு மின்சார சார்ஜ் ஏற்றும் வசதியுடன் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் நிதின் கட்காரி அறிவிப்பு

புதுடெல்லி,

டெல்லியில், இந்தோ-அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்கள், மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அந்த மின்சார வாகனங்களுக்கு சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவை அடிப்படையிலான சார்ஜ் ஏற்றும் மையங்கள் உருவாக்குவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

அதைத்தொடர்ந்து, சோலார் மின்சார சப்ளையுடன் நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறோம். அந்த சாலைகளில், ஆகாய மார்க்கமாக மின்வழிப்பாதை செல்லும். அத்தகைய சாலைகள் வழியாக செல்லும் கனரக லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள், மின்சார ‘சார்ஜ்’ ஏற்றிக் கொள்ளலாம்.

சுங்க சாவடிகளையும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி இயக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். நன்கு வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளால் பொருளாதார நடவடிக்கைகள் பெருகும். வர்த்தகம் அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பும் பெருகும். ‘பிரதமர் கதிசக்தி’ திட்டத்தால், திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தளவாட செலவுகள் குறைகிறது.

நெடுஞ்சாலைகள் அமைக்கும்போதும், விரிவாக்கம் செய்யும்போதும் மரக்கன்று நடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். சுமார் 3 கோடி மரக்கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகளில் நடப் போகிறோம். தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது, இதுவரை 27 ஆயிரம் மரங்களை அப்புறப்படுத்தி, வெற்றிகரமாக வேறு இடங்களில் நட்டு வைத்துள்ளோம்.

இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள். இந்திய தளவாடங்கள் துறையில் முதலீடு செய்ய அமெரிக்க தனியார் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.