அயோத்தி,’உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கான செலவு, 1,800 கோடி ரூபாயாக இருக்கும்’ என, அறக்கட்டளை தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தக் கட்டுமானத்தை கண்காணிக்க, நிர்வகிக்க உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டம், பைசாபாதில் நேற்று நடந்தது. இதில், மொத்தமுள்ள 15 நிர்வாகிகளில், 14 பேர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பட் ராய் கூறியதாவது:அறக்கட்டளையின் சட்ட விதிகள், அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளன.
ராமர் கோவிலுக்கான செலவு, 1,800 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில், முக்கிய ஹிந்து மதத் தலைவர்களின் சிலைகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, ராமாயண காலத்துடன் தொடர்புடையோரின் சிலைகளும் வளாகத்தில் வைக்கப்பட உள்ளன.கோவில் கட்டுமானம், அடுத்தாண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். வரும், 2024 ஜனவரியில், மகர சங்கராந்தியின்போது, கருவறையில் ராமரின் சிலை வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement