நியூயார்க்,
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்தது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி சுற்றில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-கேத்ரினா சினியகோவா கூட்டணி 3-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கேட்டி மெக்நல்லி-டெய்லர் டான்சென்ட் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.
இருவரும் இணைந்து வென்ற 6-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இத்துடன் 4 வகையான கிராண்ட்ஸ்லாமையும் முத்தமிட்டுள்ள இவர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் வென்று இருப்பதால் இந்த ஜோடிக்கு இது கோல்டன்ஸ்லாமாக அமைந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அதிகாலை அரங்கேறிய இறுதிஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், நார்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட்டை சந்தித்தார். இதில் வாகை சூடும் வீரர் தங்களது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவதுடன், ‘நம்பர் ஒன்’ அரியணையை அலங்கரிக்கும் வாய்ப்பும் இருந்ததால் இந்த போட்டி கூடுதல் கவனத்தை ஈர்த்தது.
3 மணி 20 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் அல்காரஸ் 6-4, 2-6, 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சி முகர்ந்தார். பீட் சாம்பிராசுக்கு (அமெரிக்கா) பிறகு அமெரிக்க ஓபனை குறைந்த வயதில் ருசித்த வீரர் என்ற பெருமையை அல்காரஸ் பெற்றார்.
மேலும் 19 வயதான அல்காரஸ் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்து முதல்முறையாக முதலிடத்துக்கு முன்னேறினார். 1973-ம் ஆண்டில் டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசை அறிமுகம் ஆனதில் இருந்து குறைந்த வயதில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை அல்காரஸ் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் லெய்டன் ஹெவிட் தனது 20 வயதில் நம்பர் ஒன் இடத்தை பெற்றதே சாதனையாக இருந்தது.
அதே சமயம், கேஸ்பர் ரூட்டுக்கு மீண்டும் ஒரு முறை கிராண்ட்ஸ்லாம் கனவு கலைந்தது. 3 மாதங்களுக்கு முன்பு நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் அவர் தோற்று இருந்தார். என்றாலும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் கேஸ்பர் ரூட் தரவரிசையில் 7-ல் இருந்து 2-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். முதலிடத்தில் இருந்த ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 4-வது இடத்துக்கு சறுக்கினார். ஸ்பெயினின் ரபெல் நடால் 3-வது இடத்தில் தொடருகிறார். ஜோகோவிச் (செர்பியா) 7-வது இடத்தில் இருக்கிறார்.
மகுடம் சூடிய அல்காரஸ் ரூ.20½ கோடியும், 2-வது இடம் பெற்ற கேஸ்பர் ரூட் ரூ.10¼ கோடியும் பரிசாக அள்ளினர். இந்த போட்டி தொடரில் அல்காரஸ் மொத்தம் 7 ஆட்டங்களையும் சேர்த்து 23 மணி 40 நிமிடங்கள் களத்தில் செலவிட்டு இருக்கிறார். இதுவும் ஒரு வகையில் சாதனையாகும்.
டென்னிசில் புதிய அவதாரமாக உருவெடுத்துள்ள அல்காரஸ் கூறுகையில், ‘சிறுவயதில் இருந்தே உலகின் நம்பர் ஒன் வீரராக வேண்டும். கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன். எனது கனவை நனவாக்க கடுமையாக உழைத்தேன். அதற்குரிய பலன் கிடைத்துள்ளது. தற்போது நான் உணர்ச்சி பெருக்கால் நிறைந்து இருக்கிறேன். அதனால் எனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்’ என்றார்.