ஷில்லாங், :மேகாலயாவில் சிறையில் இருந்து தப்பிய கைதிகள் நான்கு பேரை, கிராமவாசிகள் நேற்று அடித்துக் கொன்றனர்.வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில், தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜோவை சிறையில் இருந்து, ௧௦ம் தேதி ஆறு கைதிகள் தப்பிச் சென்றனர்.
இவர்களில் ஐந்து பேர், சிறையிலிருந்து ௭௦ கி.மீ., தொலைவில் உள்ள ஷாங்பங் என்ற கிராமத்திற்கு நேற்று முன் தினம் வந்தனர். அங்கு, ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிடச் சென்ற போது, கிராமத்தினர் அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர். கைதிகளை சுற்றி வளைத்த கிராமத்தினர், கட்டையால் அடித்து நொறுக்கினர். இதில், நான்கு கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மற்றொருவர் தப்பிச் சென்றார்.
இது பற்றி தகவலறிந்தபோலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கைதிகளை அடித்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. ”இந்தக் கைதிகள் கடந்த மாதம் டாக்சி டிரைவர்களை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை அடித்துக் கொன்ற கிராமத்தினர் பற்றிய விசாரணை நடந்து வருகிறது,” என, சிறைத் துறை ஐ.ஜி., தெரிவித்தார்.கைதிகள் சிறையில் இருந்து தப்பியது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஒரு தலைமை வார்டன் மற்றும் நான்கு வார்டன்களை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement