”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு பின் கட்சியின் இக்கட்டான சூழலில் ஆட்சியை காப்பாற்ற உங்கள் பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகியை முதல்வர் ஆக்கினேன்” என ஆத்தூரில் நடைபெற்ற புரட்சி பயணம் பிரச்சாரத்தின் போது சசிகலா பேசினார்.
புரட்சி பயணம் என்ற தலைப்பில் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்திற்கு வி.கே.சசிகலா வருகை தந்துள்ளார். அப்போது மாவட்ட எல்லையான தலைவாசலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஆத்தூர் மணிக்கூண்டு பகுதியில் வேனில் இருந்தபடி பொதுமக்களிடையே பேசினார்.
”சேலம் மாவட்டத்தில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த அதிமுக ஆட்சிக்காலம் தான் மக்களுக்கான ஆட்சியாக பொற்காலமாக இருந்தது. அப்போது சத்துணவு திட்டம், மகளிர்க்கான திட்டம், உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தனர் அதேபோல் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இறுதி மூச்சு வரை மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினாலே தமிழகம் முன்னேற்றம் பெறும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் எவ்வளவு வேற்றுமை இருந்தாலும் அவற்றை சரி செய்து தொடர்ந்து இயக்கத்தை வலுபடுத்தாமல் ஓயமாட்டேன். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் இக்கட்டான சூழ்நிலையில் அதிமுகவை மீட்டுள்ளோம். எனவே அன்றைய காலத்தில் நடந்ததை நிர்வாகிகள் நினைத்து பார்த்தால் தற்போதைய பிரச்னை சரியாகி விடும். 2024ல் அனைவரும் ஒன்றுபட்டு சிறப்பான வெற்றி பெறுவோம். என் அக்கா என் அருகிலிருந்து நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.
திமுகவினர், அதிமுகவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். திமுகவிற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக தான் பொறுமையாக இருக்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆட்சியை காப்பாற்ற உங்கள் பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகியை முதல்வர் ஆக்கினேன். இன்றைய நிலைமை யார்த்து கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
திமுக. ஆட்சி பொறுப்பேற்று இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்ற வில்லை. மேடையில் மட்டும் வசனங்கள் பேசி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகி உள்ளது. மாநகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. திரைப்படத் துறையில் ஆளும் கட்சி குடும்பத்தினர் தலையீடு அதிகரித்துள்ளது. கல்லூரி, பள்ளி அமைந்துள்ள பகுதிகளின் அருகாமையிலேயே போதை பொருள் அதிகாரிள்ளது.
மேட்டூர் – காவரி உபரியை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும், இராமநாயக்கன் பாளையம் கல்லாற்றில் அணை கட்டவேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கொஞ்சம் நாள் பொறுத்திருங்கள், அதிமுக ஆட்சிக்கு வந்த பின் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். நிர்வாகிகள் தொண்டர்களை மனதில் வைத்து ஒன்றுமையாக செயல்படுங்கள்” என பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM