சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் சட்டவிரோத போதைப் பொருள் பயன்படுத்தி சாலையில் நடக்க முடியாமல் தள்ளாடியபடி நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருட்கள் அதிகளவில் புழங்குவதாக அடிக்கடி புகார்கள் வருவது வழக்கம். இதை நிரூபிக்கும் வகையில், நடுரோட்டில் இளம்பெண் ஒருவர் போதையில் தள்ளாடும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியின் மக்பூல்புரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் அதீத போதையில் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் தள்ளாடியவாறு நிற்பது தெளிவாக தெரிகிறது. இப்பகுதியில் சட்டவிரோத போதைப் பொருட்கள் அதிகளவில் புழங்கி வருகின்றன. ஏற்கனவே இளைஞர்களிடம் போதை பழக்கத்தை தடுக்க போலீசார் பல முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வி அடைந்ததாக கூறுகின்றனர். இப்பகுதியின் எம்எல்ஏவான, அமிர்தசரஸ் கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜீவன்ஜோத் கவுர் கூறுகையில், ‘‘வீடியோவில் இருந்து பெண் மீட்கப்பட்டு, போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்’’ என்றார்.