'நீயா நானா' வாரா வாரம் ஆரவாரம்..ஒன்றாக வாழும் தம்பதி..சம்பள பணத்தை மட்டும் பிரித்து பார்ப்பது ஏன்?

வாராவாரம் ஆரவாரம் செய்யும் நிகழ்ச்சியாக உள்ளது நீயா நானா நிகழ்ச்சி.
குடும்ப உறவுகளை உளவியல் பார்வையில் அலசும் நிகழ்ச்சியாக உள்ளது. இதில் பேசும் பலரும் சமுதாய எண்ணத்தை பிரதிபலிக்கிறார்கள்.
ஒன்றாக வாழும் கணவன் மனைவி சம்பளத்தை மட்டும் தனித்தனியாக கணக்கு வைத்து பார்ப்பதாக நேற்றைய நிகழ்ச்சியில் பேசினர்.

விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு சிறப்பு உண்டு. வாசகர்களின் நாடித்துடிப்பை பிடித்து நிகழ்ச்சிகளை கொடுப்பதில் வல்லவர்கள். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொடர்ந்து வழங்கி வருகிறார். அவர் நிகழ்ச்சியை நடத்தும் விதம் டக்கென்று ஒருவரை மடக்கி கேள்வி கேட்பது, ஒவ்வொருவரின் மனநிலையை புரிந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்துவது. எதிராளிக்கு விளக்கி அவரிடம் இருந்து பதில் வாங்குவது ஏன அந்த நிகழ்ச்சி வாரவாரம் கலைக்கட்டுகிறது. ஒரு சில வாரங்களை தவிர பெரும்பாலும் அவர்கள் தேர்வு செய்யும் தலைப்புகள் நன்றாக இருக்கும்.

 இல்லத்தரசிகளின் கவலைத்தரும் மன நிலை

இல்லத்தரசிகளின் கவலைத்தரும் மன நிலை

அந்த வகையில் கடந்த வாரம் “பணிப்பெண்களும் அவர்களுக்கு வேலை தரும் இல்லத்தரசிகளும்” என்கிற தலைப்பில் நடந்த நீயா நானா நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியது. காரணம் அதில் பேசிய பணிப்பெண்களின் பிரச்சனைகள் ஒருபுறம், மறுபுறம் இல்லத்தரசிகளாக வந்த சிலர் தங்களுடைய நிலைப்பாட்டை பற்றி நியாயத்தை கூறுகிறோம் என்கிற பெயரில் தங்களையும் அறியாமல் தங்களிடம் உள்ள நவீன தீண்டாமை எண்ணங்களையும், ஆதிக்க எண்ணங்களையும் பேசினார். இது கோபிநாத்தையே அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இல்லத்தரசிகளின் பேச்சுகள் சிலவற்றை ட்விட்டரில் நெட்டிசன்கள் எடுத்து போட்டு கடுமையாக விமர்சனம் செய்தனர்.

 நவீன தீண்டாமை

நவீன தீண்டாமை

வேலைக்காரர்களுக்கு தனி தட்டு, தனி டம்ளர் கொடுப்பதை சில இல்லத்தரிசிகள் நியாயப்படுத்தி பேசியதை யாரும் ஏற்கவில்லை. இதை நவீன தீண்டாமை என கண்டித்தனர். அதேபோன்று மாதம் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் கூட லீவ் கிடையாது என்கிற பேச்சையும் யாரும் ஏற்கவில்லை. இந்த வாரம் கோபிநாத் நீயா நானா தலைப்பு “கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்களும் அதனால் வரும் பிரச்சினைகளும்” என்கிற தலைப்பு.

 மேலோட்டமாக பார்த்தால் சாதாரண பிரச்சினை ஆனால்...

மேலோட்டமாக பார்த்தால் சாதாரண பிரச்சினை ஆனால்…

சாதாரணமாக இந்த நிகழ்ச்சியில் மேலோட்டமாக பார்த்தால் ஏதோ கணவனை விட பெண்கள் அதிகம் சம்பாதிப்பதால் வருமானப் பிரச்சனை அல்லது வீட்டில் பிரச்சினை என்பது போல் தோன்றும். ஆனால் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு அவர்கள் பேசிய புதிய புதிய விஷயங்கள் அதிர்ச்சியை தந்தன. இந்த நிகழ்ச்சியில் கோபியை ஒரு சில இடத்தில் கோபம் அடையும் அளவிற்கு சில பெண்கள் பேசியது அமைந்தது. நிகழ்ச்சிக்கு செல்லும் முன் நிக்ழ்ச்சியின் மைய கருத்தாக இருந்தது பற்றி பார்ப்போம்.

 இளம் வயதினர் தம்பதிகள் மத்தியில் இந்த எண்ணம் ஏன்?

இளம் வயதினர் தம்பதிகள் மத்தியில் இந்த எண்ணம் ஏன்?

நீயா நானா நிகழ்ச்சியில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் பெண் என்கிற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின் மையக்கரு கணவன் வருமானம், மனைவியின் வருமானம் என்பதாக இருந்தது. இதில் பேசியவர்கள் பெரும்பாலும் 35 வயதுக்குட்பட்ட தம்பதியினர். ஒரு சிலர் 40 வயதை கடந்து இருந்தனர் ஆனால் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியாக இணைந்து, பிள்ளைகளைப் பெற்று பிள்ளைகளுடைய வளர்ச்சியை, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் தம்பதி தங்களுடைய வருமானத்தை மட்டும் தனித்தனியே வைத்துக்கொண்டு உன் வருமானம், என்னுடைய வருமானம் என்று பேசியது சற்று அதிர்ச்சியை தந்தது.

 இருவர் சம்பளத்தையும் பிரித்தே பேசிய தம்பதிகள்

இருவர் சம்பளத்தையும் பிரித்தே பேசிய தம்பதிகள்

காரணம் குடும்பத்தின் வருமானம் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வருமானத்தை ஒன்றாக இணைத்து திட்டமிடுதல் இருக்க வேண்டும். அதுபற்றி ஒரு தம்பதி கூட பேசாதது ஆச்சரியமான விஷயமே. நாங்கள் பணம் சம்பாதிக்கிறோம், எங்கள் வருமானத்தில் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை, இருவரது வருமானத்தை ஒன்றாக்கி அந்தந்த மாத செலவை திட்டமிடுகிறோம், செய்கிறோம் இது குடும்பத்திற்கான முன்னேற்றத்திற்கான ஒரு விஷயமே தவிர எங்களுடைய தனிப்பட்ட வருமானம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல என யாருமே சொல்லவில்லை.

 இருவரும் சம்பாதித்தாலும் அது குடும்ப வருமானம்

இருவரும் சம்பாதித்தாலும் அது குடும்ப வருமானம்

இருவரும் சம்பாதிக்கிறோம். இதில் வாய்ப்பு உள்ளவர் அதிகம் சம்பாதிக்கிறார் அது எங்கள் குடும்பத்திற்கு தான் நல்லது. இரண்டு பேரும் வருமானத்தை மாதம் முழுவதும் ஒன்றிணைக்கிறோம் அதில் வரவு செலவுகளை செய்து சேமிக்கும் வழியை பார்க்கிறோம் என்று ஒரு தம்பதியாவது பேசுவார் என்று பார்த்தால், கிடைத்தது ஏமாற்றமே. நூற்றுக்கு நூறு பர்சென்ட் பேசியவர்கள் அனைவரும் அவருடைய வருமானம், என்னுடைய வருமானம் இப்படி பேசியது இன்றைய சூழலில் தம்பதிகளின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை காட்டுவதாக அமைந்தது.

 முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்ட தவறிய கோபிநாத்

முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்ட தவறிய கோபிநாத்

வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் ஒன்றிணைந்து விட்டவர்கள் ஒன்றாக குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் வாழ்க்கையின் கடைசி காலம் வரை ஒன்றாக இணைந்து வாழப் போகிறவர்கள், ஆனால் தங்கள் வருமானத்தை தன் வருமானம் என பிரித்துப் பார்ப்பது வேடிக்கையான ஒன்றாக இருந்ததை காண முடிந்தது. குடும்ப உறவுகளில் பணத்தை வைத்து பார்க்கும் கணவன் -மனைவி அவர்களிடம் வளரும் பிள்ளைகளும் அதே மன நிலையில் வளரவே வாய்ப்புள்ளது. இதனால் வயதாகும்போது நமக்காக உழைத்த பெற்றோர் என்று எண்ணாமல் அவர்களை, அவர்களுக்கு செய்யும் மருத்துவ செலவு உள்ளிட்ட அத்யாவசிய செலவுகளை சுமைகளாக பிள்ளைகள் பார்க்கும் நிலை வரும். இது வாழையடி வாழையாக தொடரவும் செய்யும். இந்த நூழிலை நிகழ்வை நேற்று கோபிநாத் கூட சுட்டி காட்ட தவறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.