சேலம் மாவட்டத்திற்கு புரட்சிப் பயணம் மேற்கொண்ட சசிகலா, சேலம் மற்றும் ஆத்தூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது, கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய சசிகலா, “அதிமுகவில் ஒரே குடும்பமாய் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுக அரசு பதினைந்து மாத கால ஆட்சியில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது. திமுகவை சார்ந்த அமைச்சர்கள் மேடைக்கு மேடை நாங்கள் 15 மாத கால ஆட்சியில் இதை செய்தோம் அதை செய்தோம் என வசனங்களை நாள்தோறும் கூறி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் மூடு விழா செய்ததுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை வழிப்பறி கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்கள் மட்டும் நடைபெற்று வருகிறது. திமுகவினர் செய்யும் அராஜகங்கள் அனைத்தும் செய்தித்தாள்களின் தொலைக்காட்சியில் தினமும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை திமுக ஆட்சியில் உள்ளது. பல்வேறு போதைப் பொருட்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. பள்ளி கல்லூரிகளில் அருகிலேயே போதைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது.
இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் விரோத ஆட்சியை தமிழக மக்கள் தள்ளி வைக்க தயாராக கொண்டிருக்கின்றனர். ஆத்தூர் மக்களின் பிரதான கோரிக்கையான வசிஷ்ட நதியினை இணைத்து விவசாயிகள் பாசன வசதிகள் பெரும்வகையில் ராமநாயக்கன்பாளையத்தில் கல்லாறு தடுப்பணை கட்ட வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்பேட்டை ஆத்தூர் பகுதியில் அமைக்க வேண்டும். அரசு மகளிர் கல்லூரி அரசு பாலிடெக்னிக் அமைக்க இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இதை உடனடியாக இந்த திமுக அரசு நிறைவேற்றி தர வேண்டும். விரைவில் அதிமுக ஆட்சி அமையும்” எனக் கூறினார்.