விதிகளை மீறி உதவித் தொகை பெற்றுவந்த மாற்றுத் திறனாளிகள் 8 ஆயிரம் பேர் நீக்கம்: வருவாய் துறை நடவடிக்கை

சென்னை: விதிகளை மீறி உதவித் தொகை பெற்று வந்த 8 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளை நீக்கி வருவாய் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில், 40 சதவீத மாற்றுத் திறன் உடையவர்களுக்கு வருவாய் துறையின் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவி தொகையை 3,74,000 மாற்றுத் திறனாளிகள் பெற்று வருகின்றனர். விதிகளை மீறி சிலர் உதவித் தொகைகளை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

எனவே, பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்து தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளை உதவி தொகை பெறுவோரின் பட்டியலில் இருந்து வருவாய் துறை நீக்கியுள்ளது.

இதுதொடர்பாக வருவாய் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: சிலர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்டவற்றின் மூலம் உதவித் தொகையை பெற்றுக் கொண்டு வருவாய் துறையிலும் பெற்று வந்தனர். அவர்களை நீக்கியுள்ளோம்.

இதேபோல, பொருளாதாரத்தில் வசதியாக இருப்பவர்கள், மாற்றுத் திறன் சதவீதம் குறைவாக இருப்பவர்கள், அரசு ஊழியர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் பெயர்களை நீக்கியுள்ளோம். இவர்களுக்கு மாற்றாக விண்ணப்பித்து காத்திருக்கும் தகுதியான பயனாளிகளை இணைத்து உதவித் தொகை வழங்க உள்ளோம்.

ஒருசில தகுதியான மாற்றுத் திறனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. அதுபோன்று நீக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தால் உடனடியாக அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.