சென்னை: சென்ற ஆண்டு வெளியாயிருந்த மாநாடு திரைப்படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
நடிப்பில் கவனம் செலுத்தினாலும் தன்னுடைய முதன்மை பணியான டைரக்ஷன் பணியையும் விட்டுவிடவில்லை.
இந்நிலையில் தனது மகனும் நடிகருமான விஜய்யுடன் தனக்கு இருக்கும் முரண்களைப் பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்
நான் கடவுள் இல்லை
நடிகர் ஜெய் நடித்திருந்த கேப்மாரி திரைப்படத்தை தொடர்ந்து நான் கடவுள் இல்லை என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சந்திரசேகர். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். நடிப்பது, படங்கள் இயக்குவது மட்டுமில்லாமல் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான வரலாற்று பக்கங்களை பதிவு செய்து வருகிறார்.
விஜய் வாழ்க்கையில் திரைக்கதை
திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுவதைத் தாண்டி நடிகர் விஜய்யின் வாழ்க்கையிலும் திரைக்கதை எழுதியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரை அறிமுகப்படுத்திய காலகட்டத்திலேயே இளைய தளபதி என்கிற புனைப்பெயரை கொடுத்து இப்போது தளபதி என்று விஜய் அழைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தவர். ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்கள் தோல்வி அடையவே தன்னுடைய நண்பர் விஜயகாந்த் படத்தை இயக்கி அதில் விஜய்யை தம்பியாக நடிக்க வைத்து மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தவர்.
அப்பா மகனுக்குள் இடைவெளி
அதன்பின் விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றி விஜய்யை அரசியல் பாதைக்கும் லேசாக திருப்பியவர். இப்படி விஜய்யின் வாழ்க்கையில் ஒவ்வொரு திருப்பங்களையும் திரைக்கதையாக உருவாக்கியவர் இன்று விஜய்யுடன் இல்லாமல் தனித்து இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவருக்கு 80-வது நிறைவடைந்ததை தொடர்ந்து ஆயுள் விருக்தி பூஜை திருக்கடையூரில் நடந்தது. அதில் கூட விஜய் கலந்து கொள்ளவில்லை என்று பத்திரிகைகளும் பொதுமக்களும் விமர்சனம் செய்திருந்தார்கள்.
இடைவெளிக்கு காரணம்
இந்நிலையில் சந்திரசேகர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் விஜய் பொதுவாக ஒரு நல்லது செய்தால் அதை பாராட்ட மாட்டேன். அது என்னுடைய கெட்ட பழக்கம். ஆனால் அவர் ஒரு தவறு செய்தால் அதனை சுட்டிக் காட்டுவேன். அவர் 65 படங்கள் நடித்துள்ளார். ஆனால் அதில் மூன்று படங்களில்தான் நன்றாக நடித்துள்ளார் என்று நான் எப்போதும் சொல்வேன். அப்போது, அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொல்வதை ஏன் குறை கூறுகிறீர்கள் என்பது போல் ரியாக்ட் செய்துவிட்டு என்னுடன் பேச மறுத்து அவரது அம்மாவிடம் கூறிவிடுவார். ஷோபா என்னை வந்து திட்டுவார் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாகா கூறியுள்ளார்.