ஹைதராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ- 8 பேர் கருகி பலி

செகந்திரபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நேற்று இரவு எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ரூபி எலக்ட்ரிக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோ ரூமில் நேற்று இரவு திடீரென தீ பிடித்தது. இந்த தீ மளமளவென பக்கத்து கட்டிடங்களுக்கும் பரவியது.

இதனால் ஷோ ரூம்-க்கு மேலே இருந்த லாட்ஜ், ஹோட்டல் ஆகியவற்றில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் தீயில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், எலக்ட்ரிக் ஷோ ரூம் தரை தளத்தில் செயல்பட்டு வந்தது. சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ அடுத்தடுத்து மேல் மாடிகளுக்கும் பரவியது இந்த தீ விபத்தில் மொத்தம் 24 பேர் சிக்கி இருந்தனர். இவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணம் அடைந்தனர் என்றனர்.

இச்சம்பவம் குறித்து தெலுங்கானா அமைச்சர் முகமது அலி கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்க கடுமையாகப் போராடிப் பார்த்தனர். ஆனால் கடும் புகையால் சிலர் உயிரிழந்துவிட்டனர். லாட்ஜில் இருந்த பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இச்சம்பவத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.