கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி ஊராட்சி மற்றும் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்குகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு், பூவலம்பேடு, பெரிய புலியூர், கண்ணன்கோட்டை, ஜி. ஆர். கண்டிகை, கவரப்பேட்டை, கெட்ணமல்லி, சக்திவேடு, கண்ணம்பாக்கம், தேர்வழி, பன்பாக்கம், பெருவாயில், புதுவாயில், செங்குன்றம், பஞ்செட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் இரவு பகலாக புது கும்மிடிப்பூண்டி இருந்து தண்டலச்சேரி செல்லும் சாலையில் சென்று வருகின்றனர்.
சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அளவில ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மேற்கண்ட தொழிலாளர்கள் இரவு நேரங்களில் இந்த பள்ளங்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க கோரி பலமுறை முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார்கள் கொடுத்த நிலையில் இதுவரை அந்த சாலையை சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.