மேட்டூர்: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று நடைபெற்றது. இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கிய பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியாக மக்கள்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தமிழக அரசு மின்கட்டணத்தை கடுமையாக உயர்த்திஉள்ளது கண்டிக்கத்தக்கது. இதைக் கண்டித்து வரும் 16-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதிமுக ஆட்சியில் ரூ.562 கோடி மதிப்பில், 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை திமுக அரசு விரைவாக நிறைவேற்றி இருந்தால், வீணாகச் சென்று கடலில் கலக்கும் தண்ணீரை, ஏரிகளில் நிரப்பி இருக்கலாம். திமுக அரசின் அலட்சியத்தால் இத்திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது வேதனைக்குரியது.
அதிமுக அலுவலக உரிமை விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தர்மம் வென்றுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும்.
பெங்களூரு புகழேந்தி அதிமுக உறுப்பினர் அல்ல. ஏற்கெனவே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர். அமமுக-வில் இருந்து அதிமுகவில் இணைந்த அவரை ஊடகங்கள் மட்டுமே மிகைப்படுத்திக் காட்டுகின்றன.
ஏற்கெனவே கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மீது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என அடுத்தடுத்து புதிய சுமைகளை சுமத்தி, திமுக அரசு வஞ்சிக்கிறது. 2026-ம் ஆண்டு இன்னும் கூடுதலாக 18 சதவீதம் வரை மின் கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள்?
கடந்த 15 மாத ஆட்சியில் திமுக அரசு சேலம் மாவட்ட வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணிகளை மட்டுமே முதல்வர் திறந்துவைக்கிறார். அதையும் முழுமையாக செய்வதில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது. அதிமுக ஆட்சியில் எந்த தடங்கலும் இல்லாமல் அரசுஅதிகாரிகள் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இவ்வாறு பழனிசாமி கூறினார். தொடர்ந்து, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.