மருத்துவ சிகிச்சைக்காகவோ அழகு சிகிச்சைக்காகவோ செயற்கை மார்பகங்கள் பொருத்துபவர்களுக்கு அந்த இடத்தைச் சுற்றி புதிதாக சில புற்றுநோய்கள் ஏற்படலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) எச்சரித்துள்ளது.
கடினமான மற்றும் மென்மையான மேற்பரப்பு, சலைன் மற்றும் சிலிகான் நிரப்பப்பட்ட செயற்கை மார்பகங்கள் என அனைத்து வகை செயற்கை மார்பகங்களிலும் அவற்றைச் சுற்றி உருவாகியிருக்கும் திசுக்களில் புற்றுநோய் ஏற்படலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.
இந்தப் புற்றுநோய் அரிதாக ஏற்படுகிறது என்றாலும் எந்த வகையான செயற்கை மார்பகங்கள் பொருத்தினாலும் இவை ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் அரிதான நிணநீர் (anaplastic large cell lymphoma) சுரப்பி புற்றுநோய் மற்றும் ஒருவகை சருமப் புற்றுநோயும் (squamous cell carcinoma) ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர். இதனை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் உறுதி செய்துள்ளது. செயற்கை மார்பகங்கள் பொருத்தியதால் சிலருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செயற்கை மார்பகங்கள் பொருத்திய பெண்களுக்கு சில ஆண்டுகளுக்குப் பின்பு வீக்கம், வலி, சருமத்தில் மாற்றங்கள், கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன. பரிசோதனையில் அது புற்றுநோய் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகப் பேசியுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழக பிளாஸ்டிக் சர்ஜரி துறை மருத்துவப் பேராசிரியர் மார்க் கிளெமென்ஸ்,“இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. ஒரு புண் ஆறுவதற்கு மிக நீண்ட காலம் ஆகும்போது இதுபோன்று புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
இருந்தாலும் செயற்கை மார்பகங்கள் பொருத்துவதால் புற்றுநோய் ஏற்படுகிறதா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார். ஓராண்டில் அமெரிக்காவில் சுமார் 4 லட்சம் பெண்கள் செயற்கை மார்பகங்களைப் பொருத்திக்கொள்கின்றனர். அவர்களில் 3 லட்சம் பேர் அழகு சிகிச்சைகாகவும், ஒரு லட்சம் பேர் புற்றுநோய் வருவதைத் தடுப்பதற்காகவோ, வந்த பின்பு சிகிச்சைக்காகவோ மார்பகங்களை நீக்கிவிட்டு செயற்கை மார்பகங்கள் பொருத்திக்கொண்டவர்கள் என்கிறது புள்ளி விவரம்.
இந்நிலையில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இதுபோன்ற எச்சரிக்கையை வழங்கியுள்ளது. அதில், செயற்கை மார்பகங்களைப் பொருத்தும் பெண்களில் மூன்றில் ஒரு பெண் வலி, அந்த இடத்தில் உணர்வை இழத்தல் போன்ற பக்கவிளைவுகளைச் சந்திக்கிறார். பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு செயற்கை மார்பகங்கள் பொருத்தப்பட்ட பகுதியில் வலியுடன் கூடிய இறுக்கத்தை உணருகின்றனர். மூன்றில் ஒரு பெண்ணுக்கு, பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்களில் சிதைவு, கசிவு போன்றவை ஏற்படுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரச்னையை சரிசெய்ய மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த எச்சரிக்கையின் காரணமாக ஏற்கெனவே செயற்கை மார்பகங்கள் பொருத்திய பெண்கள் அவற்றை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் குறிப்பிட்ட இடைவெளியில் அதனைக் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.