டாமன் டையு: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 15 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து உள்ளார்கள்.
2017 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக ஆதரவோடு ஆட்சியை தொடர்ந்த நிதீஷ் குமார், 2020 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 45 இடங்களில் மட்டுமே வென்றது.
பாஜக 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மறுபக்கம் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 79 இடங்களில் வென்று அதிர்ச்சி கொடுத்தது. ஆனாலும் நிதீஷ் குமாரை முதலமைச்சராக்கி கூட்டணியில் அங்கம் வகித்தது பாஜக.
முறிந்த கூட்டணி
ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைவிட அதிக இடங்களில் வென்றதால் பீகார் அரசில் அதிகாரத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக பாஜக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஒரு கட்சிகள் இடையே மோதல் போக்கு தொடர்ந்த நிலையில் கடந்த மாதம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நிதீஷ் குமார்.
பதவியேற்பு
இதனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க முன்வந்தன. இதனால் முதலமைச்சர் பதவியை விட்டு விலகிய நிதீஷ் குமார் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
2024 தேர்தல்
பீகார் முதலமைச்சராக பதவியேற்ற கையோடு 2024 மக்களவை தேர்தலுக்காக தயாராகி வருகிறார் நிதீஷ் குமார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை சந்தித்து பேசிய அவர், பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நிதீஷ் கட்சியில் ஆபரேசன்
இந்தநிலையில் நிதீஷ் குமாருக்கு செக் வைக்கும் விதமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வெளிமாநில உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் பணியில் பாஜக இறங்கியுள்ளது. கடந்த 3 ஆம் தேதி மணிப்பூரில் 5 ஜேடியு எம்.எல்.ஏக்கள், அருணாச்சல பிரதேச ஜேடியும் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இந்த நிலையில், டாமன் டையு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஜேடியு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் 15 பேர் மொத்தமாக பாஜகவில் இணைந்துள்ளனர். அத்துடன் மொத்த ஜேடியு மாநில கிளையே பாஜகவில் இணைந்துள்ளது.