டெல்லி: செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000வழங்கப்படும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ரயில் நிலையம் அருகே உள்ள ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூமின் மேல் தளத்தில் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் தீ பரவியதில் அதில் தங்கியிருந்த 25 பேர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
விடுதியில் தங்கியிருந்தவர்கள் சிலர் தங்கள் உயிரை காப்பாற்ற ஜன்னல் வழியே கீழே குதித்தனர். தீயில் சிக்கிய சிலரை தீயணைப்பு வீரர்கள் ஹைட்ராலிக் ஏணி மூலம் மீட்டு கீழே கொண்டு வந்தனர். இருப்பினும், 8 பேர் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.