கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது, கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை, எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக அமைச்சராக இருந்த வேலுமணி ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முறைகேடான முறையில் ஒப்பந்தங்களைப் பெற்றதாக சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கேசிபி தனியார் நிறுவன மேலாண் இயக்குநர் சந்திரபிரகாஷ், அந்நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகர், கோவை ஏசிஇ டெக் மெஷினரி நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த்தன், பிஎன் புதூரைச் சேர்ந்த சிஆர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ராஜன், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சபரி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், சென்னை புரசைவாக்கம் முருகன் எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் உரிமையாளர் பரசுராமன், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஓரியன்ட் போல்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் விஜயகுமார், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்கேஎம் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் உரிமையாளர் மணிவண்ணன் ஆகியோர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கோவையில் உள்ள எஸ்பி வேலுமணியின் வீடு, அவருக்கு நெருக்கமான சந்திரசேகர் வீடு என கோவையில் மட்டும் 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னையில் அம்பத்தூர், புரசைவாக்கம் உள்ளிட்ட 10 இடங்கள், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி ஆகிய இடங்கள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ஆணையர் சிலம்பரசன் தலைமையில் போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சோதனை குறித்து தகவல் அறிந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீட்டின் முன்பாக திரண்டு, சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திமுக அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது, அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன் , பி.ஆர்.ஜி.அருண்குமார் , செ.தாமோதரன் , ஏ.கே.செல்வராஜ் , அமுல் கந்தசாமி , கந்தசாமி , கே.ஆர். ஜெயராம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.