ஸ்மார்ட் போன்களில் பேட்டரி சூடாவது பெரும் பிரச்சினை. பல முன்னணி நிறுவனங்களும் இந்த ஹீட் பிரச்சனையை தீர்ப்பதற்காக புதிய புதிய ஐடியாவோடு மொபைல்களை வெளி விட்டு கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும், இந்த பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
இப்படி மொபைல் சூடாகி வெடித்து மனிதர்களும் உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த சர்ச்சையில் அடிக்கடி மாட்டுவது ரெட்மி மற்றும் ஜியோமி. இரண்டும் ஒரே நிறுவனத்தின் வழி தோன்றல்கள்தான் என்பது வேறு கதை.
தற்போது மீண்டும் ரெட்மி 6A மொபைல் வெடித்து டெல்லி என்சிஆர் பகுதியை சேர்ந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர் தலை சிதறி இறந்துள்ளார். இரவு உறங்கும்போது தன்னுடைய மொபைலை தனது தலைக்கு அருகில் வைத்துவிட்டு உறங்கியுள்ளார் அந்த பெண்.
இந்நிலையில் அவர் உறங்கி கொண்டிருக்கும்போதே அந்த மொபைல் வெடித்துள்ளது. அதனால், அவரின் தலைப்பகுதியும் வெடித்து சிதறி அந்த பெண் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது குடும்பத்தார் அவரை மீட்டுள்ளனர்.
இந்த செய்தியை டெல்லியை சேர்ந்த யூட்யூபரும் , இறந்த பெண்மணியின் உறவினருமான MD Talk YT (Manjeet) என்பவர் ட்விட்டர் மூலம் உலகிற்கு தெரிய வைத்துள்ளார். அவரது டீவீட்டில் ரெட்மி இந்தியாவை டேக் செய்து இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் தனது உறவினர் இரவு தூங்கும்போது மொபைலை தனது தலைக்கு அருகில் வைத்துவிட்டு தூங்கியதாகவும், இரவு அது வெடித்ததில் அவர் இறந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்கு ரெட்மி இந்தியா பொறுப்பேற்று அந்த குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அரசு மற்றும் மொபைல் போன் உற்பத்தியாளர்கள் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு தரமான மொபைல்கள்தான் தயாரிக்கப்படுகின்றவா என்பதை உறுதி படுத்த வேண்டும் .
மேலும் மொபைல் நிறுவனங்கள் பல கட்ட சோதனைகள் செய்து அது மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது என்பதை தெரிந்து கொண்ட பிறகே அந்த மொபைலை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவரது டீவீட்டுக்கு கீழேயே பதில் கூறியுள்ள ஜியோமி இந்தியா தங்களுக்கு வாடிக்கையாளர் பாதுகாப்புதான் முக்கியம் எனவும், இது போன்ற விஷயங்களை நாங்கள் கண்டிப்பாக மிக கடுமையாக அணுகி தீர்வு காண முயல்வோம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அதன் அதிகாரிகளை நேரடியாக விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி அவரது குடும்பத்தை சந்திக்க சொல்லியிருப்பதாகவும் கூறியுள்ளது.