கிராமக் கோயில்களில் சமத்துவம் உள்ளதா? ரவிக்குமார் எம்.பி. கேள்வி!

கிராமக் கோயில் பூசாரிகள் அனைத்துத் தரப்பினரும் வழிபடும் கோயிலாக இருக்க வேண்டும் என்ற விதியை, கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரிய விதிகளில் சேர்க்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் குறித்துப் பேசும்போது இந்து அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்கள் குறித்தும் நாம் பேசவேண்டும். தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக கிராமக் கோயில்கள் உள்ளன. அவற்றில் பலவற்றில் ஆதிதிராவிட மக்கள் வழிபடக்கூட அனுமதி இல்லாத நிலை இப்போதும் உள்ளது. திண்டிவனம் வட்டம் விழுக்கம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயிலில் 2021 ஜூன் மாதம் 9 ஆம் தேதி அப்படி வழிபாடு செய்யத் தடை ஏற்படுத்தப்பட்டபோது இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு நான் தெரிவித்தேன். அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவரும் வழிபட ஏற்பாடு செய்தார்.

அப்போது அவரிடம் பின்வரும் கோரிக்கையையும் முன்வைத்தேன்:

“இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் பணியாற்றும் கிராமக் கோயில் பூசாரிகளின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் கிராமக்கோயில் பூசாரிகள் நல வாரியம் அமைத்து அரசாணை(நிலை) 72, தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத்துறை, நாள்.15.3.2001-ல் ஆணையிடப்பட்டது. தற்போது 4000 பூசாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியமும் அவர்களது குடும்பத்தினருக்குப் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாரியத்தின் விதிமுறைகளின்படி 9 அலுவல்சாரா உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசால் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவ்வாரியத்தில் உறுப்பினராக ஆவதற்கு ’அந்தக் கோயில் அனைவரும் வழிபடும் திருக்கோயிலாக இருத்தல் வேண்டும் என வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது’.

அதைப்போலவே கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான தகுதியிலும், ’அந்தப் பூசாரி பணிபுரிந்த கோயில் அனைத்துத் தரப்பினரும் வழிபடும் கோயிலாக இருக்க வேண்டும்’ என்ற விதியைச் சேர்த்தால் சமூகத் தடைகள் அகற்றப்பட்டுத் திருக்கோயில்களில் சமத்துவம் ஏற்பட உதவியாக இருக்கும். எனவே கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரிய விதிகளில் அதற்கேற்ப திருத்தம் செய்யுமாறு அமைச்சரை வேண்டுகிறேன்.”

ஆனால், இந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. சமூகநீதியில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் இக்கோரிக்கையை அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.