அமராவதி: ஆந்திராவில் தேர்வு எழுதுவதற்காக மாணவி ஒருவர், சகோதரர்கள் உதவியுடன் ஆற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து அக்கரைக்கு சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.
‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே..’ என்றது நன்னூல். ஆனால் இன்றோ கல்வி கற்க பணம் மட்டுமல்ல.. பல மாணவர்களுக்கு இயற்கையும் எதிரியாகி விடுகிறது. மழை கொட்டுகிறது பூமி செழிக்கும் என ஒருபுறம் மக்கள் மகிழ்ந்திருக்க, அந்த மழையாலேயே ஆற்றைக் கடக்க மாணவர்கள் அவதிப்படும் காட்சிகளும் நம் நாட்டில் மழைக்காலங்களில் சர்வசாதாராணம்.
இப்போதும் அப்படித்தான், வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேர்வு எழுத கிளம்பிய மாணவியும், அவரது சகோதரர்களும் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கின்றனர்.
சம்பாவதியில் வெள்ளம்
கடந்த சில நாட்களாக ஆந்திர பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள முக்கியமான ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அவற்றில் விசாகப்பட்டினத்தில் உள்ள சம்பாவதி ஆறும் ஒன்று. கரை புரண்டு நீர் ஓடும் இந்த ஆற்றைக் கடந்துதான், விசாகப்பட்டினத்திற்கு செல்ல வேண்டும் கஜபதிநகரம் மண்டலத்தைச் சேர்ந்த மரிவலசை கிராம மக்கள்.
தேர்வு
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான தத்தி கலாவதி எனும் மாணவிக்கு விசாகப்பட்டினத்தில் தேர்வு இருந்தது. தொடர் மழையால் அப்பகுதியில் அனைத்து வகையான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. எனவே, விசாகப்பட்டினத்திற்கு செல்வதற்கு நேரடியாக சம்பாவதி ஆற்றைக் கடப்பது மட்டுமே ஒரே வழியாக இருந்தது.
வெள்ளத்தின் வீரியம்
எப்படியும் தேர்வு எழுதியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்த கலாவதிக்கு, ஆற்றில் கழுத்து வரைச் சென்ற வெள்ளம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. எனவே, வெள்ளிக்கிழமை தனது சகோதரர் மற்றும் உறவினர் உதவியுடன் ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்வது என அவர் முடிவு செய்தார். அதன்படி ஆற்றில் இறங்கிய பிறகுதான், வெள்ளத்தின் வீரியம் அவருக்குப் புரிந்தது.
தோள் கொடுத்த சகோதரன்
ஆனால் முன்வைத்த காலை பின்வைக்க விரும்பாத அம்மாணவி, தொடர்ந்து ஆற்றில் முன்னேறி நடக்கத் தொடங்கினார். நீச்சல் தெரியாத அவர், ஒரு கட்டத்தில் ஆற்றில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட, அம்மாணவியின் சகோதரரும், உறவினரும் அவரைத் தோளில் தூக்கி, ஆற்றைக் கடக்க உதவுகின்றனர். நெகிழ்ச்சியான இந்தக் காட்சிகளை எதிர்முனையில் இருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
கல்வியின் முக்கியத்துவம்
சுமார் 35 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளும் கிடைத்தும் கல்வியைப் பொருட்படுத்தாமல், அலட்சியப்படுத்தும் மாணவர்களுக்கு இந்தக் காட்சிகள் நல்லதொரு பாடமாக அமைந்துள்ளது. கல்வியின் அவசியத்தைச் சொல்லாமல் சொல்கிறது இந்த வீடியோ.